நாடுமுழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் நாளை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை, நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கிகள் அறிவித்தன.
வார இறுதிநாள்களான சனி,ஞாயிறு உடன் வேலைநிறுத்தத்தையும் வங்கிகள் தொடர்ந்தால் 5 நாள்கள் தொடர் விடுமுறையாகிவிடும். இதனால், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கக்கூடும்.
இதைதொடர்ந்து, வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமையான நாளை வங்கிகள் செயல்பட வேண்டும் என்று மத்திய நிதித்துறை உத்தரவிட்டது.
இதனைக் கருத்தில்கொண்டு, நாளை வங்கிகளை திறக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே, நாளை நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.