நிழல் இல்லாத நாள்
நிழல் இல்லாத நாள்

2ஆவது ’நிழல் இல்லாத நாளை’ அனுபவித்த பெங்களூர்வாசிகள்!

வானியல் நிகழ்வுகளில் அபூர்வமான ‘நிழல் இல்லாத நாளை’ பெங்களூர்வாசிகள் இன்று பரவசத்தோடு அனுபவித்தனர்.

சூரியக் கதிர்கள் செங்குத்தாக, நிற்கும் பொருட்கள் மீது விழும்போது நிழல் ஏற்படுவது இயல்பு. ஆனால் இன்றைய நாளில் சூரியக் கதிர்கள் நேரடியாக விழும்போது நிழலே ஏற்படாது என்பதுதான் சிறப்பு.

அதாவது, நிழலானது பொருளின் அடியிலேயே விழுந்துவிடுவதால் நமது கண்களுக்கு அது தென்படாது. உதாரணமாக, குறிப்பிட்ட சில நாள்களில் சூரியன் நம்முடைய தலைக்கு நேராக மேலே இருக்கும்போது, நிழல் எந்தப் பக்கமும் சாயாமல் காலுக்குக் கீழே இருக்கும். இதை‘நிழல் இல்லாத நாள்’ என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த அபூர்வ வானியல் நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் தென்படுவதில்லை. அந்தந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் நிகழும். இது சூரியனின் வடக்கு வலம், தெற்கு வலம் ஆகியவற்றைப் பொறுத்து ஆண்டுக்கு 2 முறை வரும்.

அந்த வகையில், பெங்களூரில், இன்று மதியம் 12:24 மணிக்கு சூரியன் சரியாக உச்சியில் இருக்கும்போது, சிறிது நேரத்திற்கு இந்த அபூர்வ வானியல் நிகழ்வை அனுபவித்தனர்.

ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இதைப்போலவே ‘நிழல் இல்லாத நாளை’ பெங்களூர்வாசிகள் அனுபவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com