மழை வருமா? 2 மணி நேரம் முன்னாடியே சொல்லலாம்! சூப்பரான புது வானிலை கணிப்பு மாதிரி அறிமுகம்!

பாரத் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு
பாரத் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு
Published on

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட வானிலை முன்னறிவிப்பு மாதிரியை மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திரா சிங் புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தினார்.

புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தால் (IITM) உருவாக்கப்பட்டது இந்த பாரத் முன்னறிவிப்பு அமைப்பு. இதன் மூலம் கிராம அளவிலான துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்க முடியும்.

இந்த புதிய அமைப்பு முன்பு இருந்த 12 கி.மீ அளவுக்கான முன்னறிவிப்புகளை தாண்டி தற்போது 6 கி.மீ வரையில் நடக்கக்கூடிய வானிலை நிகழ்வுகள் குறித்த முன்னறிவிப்பினை வழங்குகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜித்தேந்திர சிங் , “இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துவரும் நிலையில் இதுபோன்ற துல்லியமான வானிலை முன்னறிவிப்பு, காலநிலை உணர்திறன் ஆகியவை நம் நாட்டின் இழப்புகளை குறைத்து விளைச்சல்களை மேம்படுத்தும்.இதன்‌ மூலம் பொருளாதார வளர்ச்சியை இது ஆதரிக்கும்” என்று கூறினார்.

பாரத் முன்னறிவிப்பு அமைப்பு ‘முக்கோண கனசதுர எண்முகக் கட்ட மாதிரியை” அடிப்படையாகக் கொண்டது. இது முன்பு இருந்த மாதிரிகளை விட  மிகத்துல்லியமான அளவில் அதிகப்படியான மழை, பருவ மழைக் கால மாறுதல்கள் ஆகியவற்றை  முன்கூட்டியே கணிக்கக் கூடியது. இது பேரிடர் மேலாண்மை, விவசாயம், நீர்வள மேலாண்மைக்கு உதவும்.

“இதன் தனித்துவமான அம்சம் என்னவெனில் அறிவியலில் மகளிர் சக்தியை மேம்படுத்தும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப , இது நான்கு பெண் விஞ்ஞானிகளால் வழிநடத்தப்படுகிறது.

தற்போது நாடு முழுவதிலும் 40 டாப்லர் வானிலை ரேடார்கள் மூலமாக தரவுகள் பெறப்படுகின்றன. விரைவில், இவற்றின் எண்ணிக்கை நூறாக அதிகரிக்கும் எனவும் , இதனால்  நாடு முழுவதும் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளை அளிக்க முடியும்’’ என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com