
பீகாரில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், குளத்தில் குதித்து மீனவர்களுடன் இணைந்து மீன்பிடித்து வாக்கு சேகரித்தார்.
பீகார் சட்டப்பேரவைக்கு நவ. 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி, பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் எதிர்க்கட்சி கூட்டணியான மகா கத்பந்தனுக்கு ஆதரவாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸ் எம்பி ராகுல் ஆகியோர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட தேர்தல் பிரசாரம் நாளை மறு நாளுடன் முடிவடைவதால் தலைவர்கள் பிரசாரத்தில் மும்முரமாக உள்ளனர்.
இந்தநிலையில், பெகுசராய் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்குள்ள குளம் ஒன்றில் மீனவர்கள் வலைபோட்டு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் பகுதிக்கு படகில் சென்ற ராகுல், திடீரென குளத்தில் குதித்தார். மீனவர்களுடன் சென்று வலையை பிடித்து மீன்பிடிக்க தொடங்கினார். பிறகு அவர்களுடன் சேர்ந்து ராகுலும் மீன்களுடன் கரையேறினார். அவர்களுடன் துணை முதல்வர் வேட்பாளர் முகேஷ் சஹானி, மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர் கன்னையா குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.