பீகாரைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் விடைத்தாள் திருத்தம் பணியின்போது, இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகத்தில் தீயாய்ப் பரவிய நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம், பாடலிபுத்திரம் பல்கலைக்கழகத் தேர்வுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணி நடப்பது, அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அதில் பேராசிரியர் ஒருவர் விடைத்தாள்களை படித்துப் பார்க்காமலேயே மதிப்பெண் போடுகிறார்.
இந்தக் காட்சியை யாரோ ஒருவர் அவருக்குத் தெரியாமல் பதிவுசெய்து, இணையத்தில் வெளியிட, அது காட்டுத்தீ போலப் பரவியது. அதைப் பார்த்த வலைவாசிகள் அந்தப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்படுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, இந்த வீடியோவுக்கு பதில் கருத்திடுபவர்கள், ”அந்தப் பேராசிரியர் மதிப்பெண் வழங்கும் விடைத்தாள்களுக்கு உரிய மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்” எனப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சியமாக செயல்பட்டுள்ள குறிப்பிட்ட பேராசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாடலிபுத்திர பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.