சந்திரபாபு, மோடி
சந்திரபாபு, மோடி

பா.ஜ.க. அணியுடன் பயணிப்பதில் உறுதி – சந்திரபாபு உறுதி!

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது, தெலுங்கு தேசம் கட்சி. அதன் தலைவர் சந்திரபாபு வரும் 9ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டப்பேரவையைப் போல, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 16 தொகுதிகளில் அந்தக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் அவரது ஆதரவை எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி பெற முயல்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் சந்திரபாபு பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

தில்லிக்குப் புறப்படுவதற்கு முன்னர் விஜயவாடாவில் சந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். பல தலைவர்கள், கட்சிகள் இந்த வர இந்த வெற்றி மக்களுக்கான வெற்றி. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் 5 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பெருமளவுக்கு பிரச்னைகளைச் சந்தித்தனர். இதனால் தெலுங்கு தேசம் கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லிக்குச் செல்ல இருக்கிறேன்.

என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை நான் கண்டதில்லை. மக்களுக்குச் சேவைசெய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பணியாற்றினோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன்.” என்று சந்திரபாபு கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com