அயோத்தி
அயோத்தி

அயோத்தியில் பா.ஜ.க. வேட்பாளர் தோற்ற கதை!

நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய குழந்தை இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தியில் பா.ஜ.க. வேட்பாளர் தோல்வியைத் தழுவியது பரவலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இராமர் கோயில் கட்ட அனுமதி கிடைத்தது. அங்கு முழுவீச்சில் பணிகள் நடந்துவந்தாலும் அது முடிவடைவதற்கு பல மாதங்கள் ஆகும் எனக் கூறப்பட்ட நிலையில், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் குழந்தை இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல மடாதிபதிகளின் புறக்கணிப்புக்கும் எதிர்ப்புக்கும் இடையே, பிரதமர் மோடி அதில் கருவறைக்குச் சென்று கலந்துகொண்டார். பிரதிஷ்டை நிகழ்வு நேரலையாக நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

அதையடுத்து, பிரச்சாரத்திலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அயோத்தி கோயில், இந்துத்துவ அரசியலைச் செயல்படுத்துவதாகப் பேசிவந்தனர். அது இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குக் கைகொடுக்கும் என அவர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் தரப்பிலோ அரசியலில் மதத்தைக் கலப்பதாக பா.ஜ.க. மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பதுவரை சென்றனர்.

தேர்தலில் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க.சார்பில் முக்கிய பிரமுகர் லல்லு சிங் நிறுத்தப்பட்டார். இவர் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

லல்லுவை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் அதன் தொடக்க கால உறுப்பினர் அவதேஷ் பிரசாத் வேட்பாளர். இவர், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவிவகித்தவர்.

செவ்வாயன்று வாக்குகள் எண்ணப்பட்டபோது மதியம்வரை இருவருக்கும் இடையே கடுமையான போட்டியாக இருந்தது. மாறிமாறி முன்னிலை வந்தபடி இருந்தார்.

1.30 மணியிலிருந்து பிரசாத்தின் பக்கம் காற்று அடிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்த சுற்றுகளில் அவரே தொடர்ந்து முன்னிலையைத் தொடர்ந்தார். முன்னதாக, அங்குள்ள அனுமன்கரி கோயிலில் பிரசாத் வழிபாட்டை முடித்துவிட்டு வாக்கு எண்ணும் மையத்துக்குச் சென்றதுவரை, லல்லுதான் முன்னிலையில் இருந்தார். பிறகுதான், பிரசாத்துக்கு ஏறுமுகமாக மாறியது.

இறுதியாக, முடிவு அறிவிக்கப்பட்டபோது 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவதேஷ் பிரசாத் வெற்றியைப் பெற்றார்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பிரசாத் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் வெற்றிபெற்றிருப்பது பொதுத் தொகுதியில்!

இங்கு மட்டுமல்ல, அயோத்தியா டிவிசனில் உள்ள மற்ற அம்பேத்கர்நகர், பாரபங்கி, சுல்தான்பூர், அமேதி ஆகிய நான்கு தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியுள்ளது.

சுல்தான்பூரில் போட்டியிட்டவர் முன்னாள் மைய அமைச்சரும் இந்திராகாந்தியின் மருமகளுமான மேனகா காந்தி. சமாஜ்வாதியின் ராம்புவால் நிசாத்திடம் தோற்றுப்போனார்.

அமேதி தொகுதியில் போட்டியிட்ட மைய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்திரா குடும்பத்து விசுவாசியான கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியடைந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com