“சாதிய கட்டமைப்பு மாறாமல் இருக்க பா.ஜ.க. எதை வேண்டுமானாலும் செய்யும்” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆராய்ச்சி மாணவர்களுடன் ராகுல் காந்தி இன்று உரையாடினார். அப்போது, மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி, பேசியதாவது, ''இந்தியா, பாரத் ஆகிய இரண்டு வார்த்தைகளுமே ஏற்றுக் கொள்ளக் கூடியவை. இந்தியா, பாரத் என்ற இரண்டு சொல்லையும் அரசியல் சட்டம் பயன்படுத்துகிறது. எனவே இந்த சொற்களில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை. எங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயரிட்டதால் பாஜகவிற்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பாரத் என்று அழைப்பதால் எங்களுக்கு பிரச்சனை இல்லை.” என்றார்.
மேலும், “கீதை, உபநிடதங்கள் உள்ளிட்ட பல்வேறு இந்து தத்துவ நூல்களை தான் படித்துள்ளேன். பா.ஜ.க. பேசும் கொள்கை இந்துயிசமோ, இந்து தத்துவமோ இல்லை. பா.ஜ.க. கூறும் இந்துத்துவம் எந்த இந்து தத்துவ புத்தகத்திலும் உபநிடதங்களிலும் இல்லை. மற்ற மதத்தினரை அச்சுறுத்துமாறும் துன்புறுத்துமாறும் எந்த இந்து தத்துவ நூல்களும் கூறவில்லை. இந்து தேசியவாதம் என்பதே தவறான வார்த்தை. பாஜகவுக்கும் இந்து தத்துவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவர்களுக்கு எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்திய சாதிய கட்டமைப்பு மாறாமல் இருக்க பா.ஜ.க. என்ன வேண்டுமானாலும் செய்யும். குறிப்பிட்ட சிலர் மட்டும் ஆதிக்கத்திலிருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.
இந்தியாவின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே வாக்களித்துள்ளனர். 40% பேர் தான் பா.ஜ.க.விற்கு வாக்களித்துள்ளனர். எனவே, பெரும்பான்மை மக்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருப்பதாக சொல்வதில் உண்மை இல்லை.
அவர்கள் சமூகத்தில் பிரிவினையை உருவாக்குகிறார்கள்,வெறுப்பை பரப்புகிறார்கள். அப்படித்தான் அவர்கள் செயல்படுகிறார்கள். பா.ஜ.க.வினர் பலம் மிக்க பணக்கார முதலாளிகளுடன் நட்பு பாராட்டுகின்றனர். அவர்கள் தான் இவர்களுக்கு நிதியுதவி செய்கின்றனர்.
மோடிதான் எல்லாவற்றையும் செய்கிறார் என்ற எண்ணம் மிகவும் தட்டையானது. அவர் இதில் வெறும் கருவி தான். ஆர்.எஸ்.எஸ். நினைத்தால் மோடியை 5 நிமிடங்களில் தூக்கி எறிந்திட முடியும்.” என்று ராகுல் காந்தி பேசினார்.