சாருதத்தா ஜாதவ்
சாருதத்தா ஜாதவ்

அன்று பார்வையற்ற டெலிபோன் ஆபரேட்டர்; இன்று டிசிஎஸ்ஸில் துறைத் தலைவர்! ஊக்கமூட்டுக்கும் சாதனை செய்த ஜாதவ்

சிறு வயதிலேயே பார்வை பறிபோகிறது. படிப்பைக் கைவிட சொல்லும் குடும்பத்தினர். ஆனாலும், படித்துவிட வேண்டும் என்ற வேட்கை. பணி இடங்களில் புறக்கணிப்பு. இப்படி பல போராட்டங்களைக் கடந்த இன்று டிசிஎஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப அணுகல் மையத்தின் தலைவராக இருக்கிறார் சாருதத்தா ஜாதவ். நெகிழ வைக்கும் அவரின் வாழ்க்கைப் பயணம், ஓர் முன்னுதாரணம்.

மும்பையை சேர்ந்த ஜாதவ் படிப்பில் மட்டுமில்லை விளையாட்டிலும் கெட்டிக்காரர். அவரின் பெற்றோர், மழைக்கு கூட பள்ளியின் பக்கம் ஒதுங்காதவர்கள். ஆனாலும், தன் மகன் படிக்க வேண்டும் என உறுதியாக இருந்தனர்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள், கண்ணில் கரும்புள்ளி ஒன்று இருப்பதாக கூறி பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பினான் ஜாதவ். பிறகு தான் தெரிகிறது, அது குணப்படுத்தவே முடியாத கண் நோய் என்று. விரைவில் இடது கண்ணின் பார்வை பறிபோனது. அடுத்த ஓரிரு வருடங்களில் வலது கண் பார்வையையும் இழக்கிறார். இந்த துயரிலிருந்து அவரின் குடும்பம் மீள்வதற்குள், அவருடைய அப்பாவின் வேலையும் பறிபோகிறது. இதனால், குடும்பமே நிலைகுலைந்து போகிறது. கூடவே கடுமையான பொருளாதார நெருக்கடியும்.

ஜாதவ்வின் பெற்றோருக்கு அவரை மருத்துவராக்க வேண்டும் என்பது ஆசை. திடீரென ஜாதவ்வுக்கு பார்வை பறிபோகவோ, அந்த ஆசையை கைவிட்டுள்ளனர். மகனுக்கு மீதமிருக்கின்ற பார்வையையாவது காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில், ஜாதவை படிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றனர். ஆனால், ஜாதவ் படிப்பதை நிறுத்தவில்லை.

குறைந்த பார்வையுடன் கல்லூரிக்கு செல்லத் தொடங்கிய ஜாதவ், கல்லூரி முடிந்ததும் பகுதி நேர வேலைக்கு சென்றுள்ளார். சட்ட நிறுவனம் ஒன்றில் டெலிபோன் ஆபரேட்டர் வேலை. இளங்கலை பொருளாதார பட்டம் பெற்ற அவர், மும்பை பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு வங்கியில் டெலிபோன் ஆபரேட்டராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

”நான் தொடர்ந்து படித்து வங்கி அதிகாரி தேர்வில் இரண்டு முறை தேர்ச்சி பெற்றேன். ஆனால், என் பார்வை குறைபாடு பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போட்டது. என் வாழ்நாள் முழுவதும் என் திறமையை நம்பாதவர்களை எதிர்கொண்டுதான் வந்திருக்கிறேன்” என்கிறார் ஜாதவ்.

அவர் வங்கியில் டெலிபோன் ஆபரேட்டராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் தான், இந்தியாவிற்கு பர்சனல் கம்பியூட்டர் அறிமுகமாகிறது. அந்தசமயத்தில் அவருக்கு மென்பொறியியல் மீது பார்வை திரும்பியிருக்கிறது. மென்பொருளியலில் டிப்ளமோ படிக்கலாம் என நினைத்து, நிறுவனங்களுக்கு விண்ணப்பித்திருக்கிறார். நிறுவனங்களோ, பார்வையற்ற இவருக்கு சொல்லித்தர மறுத்திருக்கிறது. இது தொடர்பாக ஜாதவ் இந்திய குடியரசு தலைவருக்குக் கடிதம் எழுதுகிறார். அதிர்ஷ்டவசமாக, அவரை சேர்த்துக்கொள்ள இன்ஃபோடெக் நிறுவனம் முன்வந்ததுள்ளது, சில நிபந்தனைகளுடன். இதையே சவாலாக நினைத்துப் படித்த அவர், வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவராக இருந்ததோடு, மேலும் ஒரு டிப்ளமோ படிப்பையும் படித்துள்ளார்.

ஜாதவ் தான் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப அறிவின் மூலம் வங்கியில் உள்ளவர்களுக்கு உதவி செய்துள்ளார்.

பள்ளி நாட்களில் அப்பா சொல்லிக் கொடுத்த செஸ் விளையாட்டை தொடர்ந்து விளையாடியுள்ளார் ஜாதவ். 1998இல் அயர்லாந்தில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் அளவிற்கு ஜாதவ் செஸ் விளையாட்டில் கிங்.

2004ஆம் ஆண்டு வரை வங்கி வேலை, செஸ் விளையாட்டு என இருந்த ஜாதவ், சிலரின் உதவியால் ஜிடிஎல் தொலை தொடர்பு நிறுவனத்தின் நேர்காணலில் தேர்ச்சி பெற்றுள்ளார். அங்கு திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த போது, பார்வையற்றோர் விளையாடும் alk64 என்ற செஸ் மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிடம்  விருது பெரும் சாருதத்தா ஜாதவ்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிடம் விருது பெரும் சாருதத்தா ஜாதவ்.

பின்னர், 2007இல் டிசிஎஸ் நிறுவனத்துக்கு மாறியுள்ளார். அங்கு தான் அவர் பெரிதும் மதிக்கும் அனந்த் கிருஷ்ணனை (தலைமை தொழில்நுட்ப அதிகாரி) சந்தித்துள்ளார். அவர் தான், டிசிஎஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சி செய்வதற்கும், அனைவரும் தொழில்நுட்பத்தை அணுக வைக்கும் மையத்தை அமைப்பதற்குமான வாய்ப்பை ஜாதவ்வுக்கு கொடுத்துள்ளார்.

இன்று பார்வையுள்ளவர்கள் தொழில்நுட்பத்தை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்களோ, அதே அளவுக்கு பார்வையற்றவர்களும், மாற்றுத்திறனாளிகளும் அணுகும் அளவிற்கு ஜாதவ் தொழில்நுட்பத்தை மாற்றியிருக்கிறார். அவர் டெய்ஸி (digital accessible information system)வடிவமைப்பைப் பயன்படுத்தி ஆடியோ மற்றும் உரை ஒத்திசைவுடன் ஒரு செஸ் புத்தகத்தை உருவாக்கியுள்ளார். மேலும் பார்வையற்றோருக்கான செஸ் இணைய வானொலியை உருவாக்கியுள்ளார்.

ஜாதவ் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்ததோடு, ஏஐ/ எம்எல் தொடர்பாக சான்றிதழ் படிப்பையும் முடித்துள்ளார். புது புது தொழில்நுட்பங்களை பார்வையற்றவர்களும் பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு ப்ராஜெட்களை செய்து வருகிறார் ஜாதவ்.

logo
Andhimazhai
www.andhimazhai.com