
ஆந்திர மாநிலம் கர்னூலில் இன்று (அக்.24) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நகருக்கு 40 பயணிகளுடன் படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து அதிகாலை 3.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்துக்கு வந்த போது எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது. இதில் பேருந்தின் கீழ்ப்பக்கம் இருசக்கர வாகனம் சிக்கியதாக தெரிகிறது.
தொடர்ந்து விபத்தில் சிக்கிய பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்துள்ளது. அடுத்த சில வினாடிகளில் அது மளமளவென பேருந்தின் மற்ற பகுதிக்கும் தீ பரவியுள்ளது. இதில் எரிபொருள் இருந்த டேங்கிலும் தீப்பற்றி அது வெடித்ததாக தெரிகிறது. விபத்தை அடுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது தவித்தனர். சிலர் அவசர காலத்தில் உதவும் எமர்ஜென்சி எக்சிட் கதவை உடைத்து கொண்டு லேசான காயங்களுடன் பேருந்தில் இருந்து வெளியேறினர்.
பேருந்தில் இருந்து வெளியேற முடியாத பயணிகள் தீ மற்றும் புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர்.
தேசிய நெடுஞ்சாலை 44இல் கர்னூல் மாவட்டம் உல்லிண்டகொண்டா பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் முகாமிட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் வருவதற்குள்ளாகவே பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலாகி உள்ளது.