மேற்குவங்க மாநிலத்தில் 15ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ள சுமார் 5 இலட்சம் ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2012ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மேற்குவங்க மாநிலத்தின் பின்தங்கிய வகுப்பினர் இட ஒதுக்கீடு சட்டத்தின்படி, சேர்க்கப்பட்ட சாதியினரை அப்பட்டியலிலிருந்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பால் இதுவரை வழங்கப்பட்ட குறைந்தது 5 இலட்சம் பிற பிற்படுத்தப்படடோர் சான்றிதழ்கள் செல்லாதவை ஆக்கப்படும். இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களால் எந்த அரசு வேலைக்கும் செல்லமுடியாது.
புதிய சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட 42 பிரிவினரை நீக்கி தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தீர்ப்பைக் குறித்து கருத்துதெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, சிறுபான்மையினருக்கு பிற பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அளிப்பதைத் தடுத்துநிறுத்துவதை அனுமதிக்க முடியாது என்று திடமாகக் கூறினார்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துடன் ஆலோசித்து நீக்கப்படவேண்டியவற்றை நீக்கியும் புதிய வகுப்பினரைச் சேர்த்தும் புதியதாக பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தயாரிக்க சட்டப்பேரவைக்கு பரிந்துரை வழங்கவேண்டும் என்றும் மாநில பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.