பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியா கூட்டணியின் வாக்கு ஜிகாத்; அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும்! – பிரதமர் தாக்கு!

’வாக்கு ஜிகாத்’ என்ற இந்தியா கூட்டணியின் அழைப்பு அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும் என பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் வருகின்ற 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்தில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

சபர்காந்தா மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், வாக்கு ஜிகாத்தை குறிப்பிட்டு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோடி பேசியதாவது:

“இந்தியா கூட்டணியின் தலைவர் ஒருவர் முஸ்லிம் மக்கள் வாக்கு ஜிகாத் நடத்தி இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பேசுகிறார். இது படித்த குடும்பத்திலிருந்து வந்தவர் பேசியது, மதரஸாவிலிருந்து வெளிவரும் குழந்தை பேசியது அல்ல. அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுகூடி வாக்களிக்க வேண்டும் என்று இந்திய கூட்டணி கூறுகிறது.

இந்தியா கூட்டணியினர் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அவமதித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தார்களா? ஒருபுறம் இந்தியா கூட்டணியினர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களின் இடஒதுக்கீட்டை பறிக்க நினைக்கும் சூழலில், மறுபுறம் வாக்கு ஜிகாத்துக்கான முன்னெடுப்பை எடுத்துள்ளார்கள்.” எனத் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு ஜிகாத் நடத்தி அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை சமாஜவாதி கட்சிப் பிரமுகரான மரியா ஆலம் பேசியது சர்ச்சையானது. மரியா ஆலம், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் உறவினராவார்.

மரியா ஆலமின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக ஆனந்த் நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் தலைவர்கள் அவர்களுக்கு ஆசி வழங்குவார்கள் என்று விமர்சித்தார்.

மேலும், “பலவீனமான காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாத தலைவர்களுக்கு ஆதாரங்களை வழங்கினர். ஆனால், பாஜக அரசு அவர்களின் மண்ணிலேயே பயங்கரவாதிகளைக் கொன்று குவித்தது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று பாகிஸ்தான் நினைக்கிறது. காங்கிரஸ் அழிவைக் கண்டு பாகிஸ்தான் அழுகிறது.” என விமர்சித்துள்ளார்.

ஏற்கெனவே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் முத்திரை இருப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவரின் சொத்துகளையும் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கிவிடுவார்கள் என்றும், மத அடிப்படையில் காங்கிரஸ் இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் அடுக்கடுக்கான மோடியின் குற்றச்சாட்டுச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com