“PM CARES நிதி குறித்து கேள்விக்கு பதில் சொல்ல முடியாது…” -பிரதமர் அலுவலகம்

“PM CARES நிதி குறித்து கேள்விக்கு பதில் சொல்ல முடியாது…” -பிரதமர் அலுவலகம்
Published on

பி.எம். கேர்ஸ் நிதி குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப அதிகாரமில்லை என பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக பதிலளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து 2020ஆம் ஆண்டு பி.எம். கேர்ஸ் என்னும் நிதி அமைப்பை பிரதமர் நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்டது. இந்த நிதி அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைக்கு பஞ்சமில்லை. இந்த அமைப்புக்கு யார், எவ்வளவு நிதி கொடுக்கிறார்கள் என்று வெளிப்படையாக தெரியாததே இதற்கு காரணம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்கூட பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து தெரிந்து கொள்ள முடியாது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி மக்களவை செயலகத்திற்கு பிரதமர் அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மக்களவையில் 41 (2) (Vii) மற்றும் 41 (2) (Xvii) ஆகிய விதிகளின் படி 3 நிதிகள் தொடர்பாக கேள்வி எழுப்ப அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பி.எம்.கேர்ஸ் நிதி, தேசிய நிவாரண நிதி, தேசிய பாதுகாப்பு நிதி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எம்.பி.க்களுக்கு அதிகாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டிற்கான பி.எம். கேர்ஸ் அறிக்கையின்படி, பி.எம்.கேர்ஸ் நிதியின் மொத்த இருப்பு ரூ.6,283.7 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com