500/500 - மறு மதிப்பீட்டில் சிபிஎஸ்இ மாணவி அதிரடி மதிப்பெண்!

Anvi kejriwal
அன்வி கெஜ்ரிவால்
Published on

சிபிஎஸ்சியே உன் மறுபெயர் குளறுபடியா? என ஏற்கெனவே மாணவர்களால் வறுக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் சிபிஎஸ்சி-யின் தேர்வு முறை மீது கரி பூசி இருக்கிறார் ஜார்க்கண்ட் மாணவி ஒருவர்!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு மாணவி அன்வி கெஜ்ரிவால், மறுமதிப்பீட்டில் 500/500 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே-13ஆம் தேதி வெளியாகின. அதில் மாணவி அன்வி 95.2% மட்டுமே பெற்றிருந்தார்.

ஆனால், அன்வி இன்னும் கூடுதல் மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்திருந்தார்.

அந்தத் தேர்வு முடிவில், ஆங்கிலத்தில் 81 மதிப்பெண்ணும், பிஸினஸ் ஸ்டடீஸ் பாடத்தில் 95 மதிப்பெண்ணும் பெற்றிருந்தார்.

அன்வி வகுப்புத் தேர்வுகளிலே ஆங்கிலத்தில் இதைவிட அதிக மதிப்பெண்கள் பெறுவார் என்றும், அவருடைய உழைப்பிற்கு இதைவிட அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார்.

இதனால், சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டிற்கான அறிவிப்பை வெளியிடும்வரை காத்திருந்தார். அறிவிப்பு வெளியானதும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தார்.

மறு மதிப்பீட்டிற்குப் பிறகு சிபிஎஸ்இ வெளியிட்ட முடிவில் அன்விக்கு எதிர்பார்த்தபடியே அதிக மதிப்பெண்கள் கிடைத்தது. அதில் 500/500 உடன் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இது குறித்து ஊடகத்தினருக்குப் பேசிய அன்வி, “என்னுடைய கடின உழைப்பே இதற்குக் காரணம். நான் தினமும் எவ்வளவு நேரம் படிக்கவேண்டும் என்று கணக்கில் வைத்துக்கொள்ள மாட்டேன். எவ்வளவு பாடங்களை முடிக்க வேண்டும் என்று கணக்கிடுவேன். அந்த நேரத்தில் முழுமனதுடன் முடிக்க எண்ணிய பாடங்களை முடிப்பேன். சமூக ஊடகங்கள் நமது படிப்பைக் குறுக்கிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

சிபிஎஸ்சியில் இம்முறை ஓஎஸ்எம் முறைப்படி விடைத்தாள்கள் திருத்தப்பட்டதால் அதில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவியே இப்படி மறுமதிப்பீட்டில்தான் தன்னை நிறுவ வேண்டி இருக்கிறது! ம்ஹூம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com