போராடும் மருத்துவர்களிடம் மைய அரசு சொல்வது என்ன?
கொல்கத்தா மருத்துவரை பாலியல் வன்கொடுமைப் படுகொலை செய்ததற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் நாடளவில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தைக் கைவிடுமாறு மைய அரசு அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் 24 மணி நேரப் போராட்டம் என்பது இதுதான். மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவியுள்ள நிலையில் இந்தப் போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், மைய சுகாதாரத் துறை கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஒரு குழுவை அரசு அமைக்கவுள்ளதாக மைய சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
அனைத்து மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பிட மருத்துவர்கள் கூட்டமைப்பு, இந்திய மருத்துவ சங்கம், அரசு மருத்துவக் கல்லூரி இருப்பிட மருத்துவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் கோரிக்கைகளை அரசாங்கம் கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பாதிப்பு, நலன் கருதி மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்று மைய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.