குற்றம்சாட்டப்பட்ட சுசனா சேத்
குற்றம்சாட்டப்பட்ட சுசனா சேத்

4 வயது மகனைக் கொன்ற சி.இ.ஓ… விசாரணையில் வெளியான திடுக்கிடும் சம்பவம்!

பெற்றெடுத்த தாயே தனது நான்கு வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்த சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதைய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

கோவாவில், சுசனாவும் அவரது மகனும் தங்கியிருந்த அறையில் காலியாக இருந்த இரண்டு இருமல் மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனை 4 வயது மகனுக்கு குடிக்கக் கொடுத்து பிறகு சுசானா கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதால், அவர் திட்டமிட்டே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்கின்றனர். அதேபோல், உடல் கூறாய்வில், சிறுவன் முகத்தில் துணி அல்லது தலையணையை வைத்து அழுத்தி மூச்சுத்திணறலை ஏற்படுத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுசனா சேத் (வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சுசனாவும் அவரது நான்கு வயது குழந்தையும் கடந்த சனிக்கிழமை வடக்கு கோவாவில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் காலை ஓட்டல் அறையை காலி செய்து விட்டு அவர் டாக்சி மூலம் பெங்களூருக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்ய வந்த ஓட்டல் ஊழியர், அங்கு ரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதை அவர் ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சுசனா ஓட்டலுக்கு வந்தபோது அவருடன் இருந்த மகன், செல்லும்போது உடன் இல்லாததால் ஓட்டல் ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஓட்டலில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது சுசனா தனது மகனுடன் ஓட்டலுக்கு வந்த நிலையில், திரும்பி செல்லும்போது மகனை அழைத்து செல்லவில்லை என்பது உறுதியானது. இதுகுறித்து போலீசார் சுசனாவை செல்போனில் தொடர்பு கொண்டு “உங்களது மகன் எங்கே” என விசாரித்தனர். அப்போது சுசனா, ”தனது மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றுள்ளதாக” கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய முகவரியை போலீசார் சரிபார்த்தபோது அது போலியான முகவரி என தெரியவந்தது. இதனால் ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர் பயணித்த டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு பேசியபோது, கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதும், காரில் சுசனா மகன் இல்லை என்பதும் உறுதியானது. மேலும் கார் டிரைவரை அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்குக் காரை கொண்டு செல்லுமாறு போலீசார் கூறினர். அதன்படி டிரைவர், ஜமங்கலா போலீஸ் நிலையத்திற்கு காரை ஓட்டி சென்றார். அங்கு கோவா போலீசார் கூறியபடி, காரை போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தபோது காரில் இருந்த சூட்கேசில் சுசனாவின் மகன் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுசனா சேத் தனது மகனைக் கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காரில் எடுத்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுசனா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு இருமல் மருந்து குடிக்கக் கொடுத்து, பிறகு கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com