சந்திராயன்-3 : லேண்டரின் சுற்று வட்டப் பாதை 113 - 157 கி.மீ. ஆகக் குறைக்கப்பட்டது!
நிலவைச் சுற்றிவரும் சந்திராயன்-3 விண்கலத்தின் லேண்டர் கருவியின் வேகம் குறைக்கப்பட்டு, 113 கி.மீ.- 157 கி.மீ. சுற்று வட்டப் பாதைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சந்திராயன் விண்கலத்தின் இயக்கம் சீராக இருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்- இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயனின் லேண்டரின் சுற்றுவட்டக் குறைப்பு, அடுத்த முறை வரும் 20ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலமானது, வரும் 23ஆம் தேதி தரையிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்துவருகின்றனர்.
விண்கலத்திலிருந்து உந்து கலன் தொகுதியிலிருந்து லேண்டர் கருவி நேற்று தனியாகப் பிரிக்கப்பட்டு, அது தனியாக நிலவைச் சுற்றிவருகிறது.
இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி லேண்டர் நிலை பொசிசனிங் கேமரா எடுத்த படத்தையும், அதையடுத்து விண்கலத்திலிருந்து தனியாகப் பிரிந்தபோது லேண்டர் இமேஜர் கேமரா- 1 எடுத்த காணொலிக் காட்சியையும் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.