நிலவின் சுற்று வட்டத்துக்குள் சந்திராயன் - 3
நிலவின் சுற்று வட்டத்துக்குள் சந்திராயன் - 3ISRO

நிலவின் 2ஆம் சுற்றுக்குள் இன்று செல்கிறது சந்திராயன்-3 !

நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நேற்று வெற்றிகரமாகச் சென்றடைந்த ’சந்திராயன்- 3’ விண்கலம், இன்று இரண்டாவது கட்ட சுற்றுவட்டத்தில் நுழைகிறது.

நிலவுக்கு விண்கலனை அனுப்பி ஆய்வுசெய்யும் இந்தியாவின் சந்திராயன் திட்டம், மூன்றாவது முறையாக முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஜூலை 14ஆம் தேதியன்று சிறிஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அனுப்பப்பட்ட சந்திராயன் -3 விண்கலம், புவி ஈர்ப்பு விசை மண்டலத்துக்குள் வெற்றிகரமாக முதல் கட்டப் பயணத்தை முடித்தது.

இரண்டாவது கட்டமாக, நேற்று நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்தது. நேற்று இரவு 7.12 மணி முதல் 1,835 நொடிகளுக்கு உந்துதல் செயல்பாட்டின் மூலம், விண்கலமானது நிலவின் சுற்றுவட்டத்துக்குள் செல்லும்படி செய்யப்பட்டது. நிலவில் நான்கு சுற்றுவட்டப் பாதைகளில் பயணம் செய்து, கடைசியாக நிலவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் சுற்றிவருமாறு செய்யப்படும். பின்னர் அங்கிருந்து விண்கலத்தில் உள்ள லேண்டர் நிலவின் தரையில் இறக்கப்படும்.

இப்போதைய சுற்றுவட்டத்தில் குறைந்தது 164 கி.மீ.ஆகவும் அதிகபட்சமாக 18,074 கி.மீ. ஆகவும் இருக்கிறது. அதாவது, நிலவைச் சுற்றி விண்கலம் ஒரு பக்கம் குறைந்த சுற்றுவட்டமாகவும் நீள்வட்டப் பாதையில் அதிகபட்சத் தொலைவிலும் சுற்றிவரும்.

நான்கு நிலைகளில் இந்த சுற்றுவட்டம் படிப்படியாகக் குறைக்கப்படும். ஏற்கெனவே, புவி வட்டப் பாதையிலும் விண்கலம் இப்படியான முறையில்தான் படிப்படியாக உந்தித் தள்ளப்பட்டு, நிலவை நோக்கி செலுத்தப்படுகிறது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையைத் தொட்டதை அடுத்து, முதல் சுற்றுவட்டக் குறைப்பு இன்று இரவு 11 மணி அளவில் நடக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள லேண்டர், புரொப்பல்சன் அமைப்பு இரண்டும் வரும் 17ஆம் தேதியன்று தனித்தனியாகப் பிரியும்.

லேண்டரானது ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com