தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கருத்துக் கேட்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தில் பயன்பெறும் குடும்பங்களில் உள்ள தனி நபர் ஒருவருக்கு 7 கிலோ உணவுதானியம் வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முன்வந்துள்ளது.
இருப்பினும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 35 கிலாே உணவுதானியம் தான் வழங்கப்படும்.
முன்னர், குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 35 கிலாே உணவுதானியம் வழங்கப்பட்டது. தற்போது குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை கொண்டு தரவுள்ளது.
தற்போதுள்ள முறையில் சிறிய குடும்பங்கள் அதிக பலனையும், பெரிய குடும்பங்கள் குறைந்த பலனையும் பெறுகின்றன. இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்றவே புதிய திருத்தத்தை கொண்டுவருவதாக மத்திய அரசு வெளியிட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலோட்ட பார்வைக்கு இது சரியாகத் தோன்றலாம். ஆனாலும் பிரச்னைகள் உள்ளன.
இதுகுறித்து கேரளாவின் உணவுத்துறை அமைச்சர் அனூப் ஜேக்கப் குறிப்பிட்டதாவது :
"இந்த திருத்தத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம். அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 35 கிலோ உணவுதானியம் அளிக்கும் திட்டத்தை தொடர வேண்டும். இல்லாவிட்டால், கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கான ஒதுக்கீடு குறைந்துவிடும்."
"இந்தத் திருத்தம் உணவுதானிய ஒதுக்கீட்டில் வடக்கு-தெற்கு மாநிலங்களின் இடையே பிளவை ஏற்படுத்தும். பொதுவாக வடமாநிலங்களில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை தென் மாநிலங்களை விட அதிகம். மக்கள்தொகை அதிகரித்த போதிலும், அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை திருத்தப்படாததால், ஏராளமானோர் இந்த திட்டத்தின் பலனை அனுபவிக்க முடியவில்லை. மேலும், ஒரு நபருக்கு 14 கிலோவாக அதிகரிப்பதுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அடிப்படையில் பருப்பு வகைகள், எண்ணெய் ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும்." என்று உணவு உரிமை இயக்கத்தின் நிர்வாகி அனுராதா தல்வார் அறிவித்துள்ளார்.
இந்த திருத்தம் மத்திய உணவு-பொது விநியோகத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த கருத்துகளை பொதுமக்கள் ஜூலை 13 வரை தெரிவிக்கலாம். அந்த கருத்துகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று மத்திய உணவு-பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.