சிவாஜியின் புலிநக ஆயுதம்
சிவாஜியின் புலிநக ஆயுதம்

சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நக ஆயுதம் : இங்கிலாந்தில் இருந்து இந்தியா வருகிறது!

பீஜப்பூர் சுல்தானின் தளபதியான அஃப்சல் கானைக் கொல்வதற்காக சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நக ஆயுதம், இங்கிலாந்து மியூசியத்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுகிறது. இதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பீஜப்பூர் சுல்தான் அஃப்சல் கான் - சிவாஜி சந்திப்பு 1659ஆம் ஆண்டு ஆண்டு நடைபெற்றது. அப்போது, இருவரும் கட்டிப்பிடித்தபோது அஃப்சல் கான் திடீரென சிவாஜியின் கழுத்தை நெருக்கி கத்தியால் தாக்க... சுதாரித்துக்கொண்ட சிவாஜி, தனது 'புலி-நக ஆயுதத்தால்' அஃப்சல் கானைக் குத்திக் கொன்றார் என்பது வரலாறு.

எஃகு இரும்பால் செய்யப்பட்ட அந்தப் புலி நக ஆயுதம், இப்போது இலண்டனில் உள்ள விக்டோரியா - ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது. நீண்ட காலமாக அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அந்த ஆயுதத்தை, இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் மகாராஷ்டிர அரசு இறங்கியுள்ளது.

விக்டோரியா - ஆல்பர்ட் அருங்காட்சியகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள, மகாராஷ்டிர கலாச்சாரத் துறை அமைச்சர் சுதீர் முங்கந்திவார் இந்த மாத இறுதியில் லண்டனுக்குச் செல்ல உள்ளார். ஆண்டு இறுதிக்குள் புலி நக ஆயுதத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியும் என மகாராஷ்டிர அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“பிரிட்டன் அதிகாரிகளிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுள்ளோம். அவர்கள், சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நக ஆயுதத்தைத் திருப்பித்தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். சிவாஜி அஃப்சல் கானைக் கொன்ற நினைவுநாளில் அதைத் திரும்பப் பெறலாம். அதேபோல், சிவாஜியின் ஜகதம்பாள் வாளையும் திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். சிவாஜியின் புலி நக ஆயுதம் வரலாற்றுப் பொக்கிஷம் என்பதால், அது பாதுகாப்புடன் எடுத்துவரப்படும்.” என்கிறார் சுதீர் முங்கந்திவார்.

புலி நக ஆயுதத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில், அமைச்சர் சுதீர் முங்கந்திவாரும், அந்த மாநில தொல்லியல் இயக்குனர் தேஜாஸ் கார்ஜ் ஆகியோர் இலண்டனுக்குச் செல்கின்றனர். இதற்காக மராட்டிய அரசு ரூ. 50 லட்சம் செலவுசெய்கிறது.

சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதமானது, முக்கியமான ஒரு மகாராஷ்டிர வரலாற்று நிகழ்வுடன் தொடர்புடையது என்பதால், அந்த மாநிலத்தவர் தங்களின் உணர்ச்சிபூர்வமான ஒரு பழம்பொருளாகக் கருதுகின்றனர். அந்த ஆயுதத்தின் வருகையை, ஒட்டுமொத்த மாநிலமும் எதிர்பார்த்து இருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com