நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று போராட்டம் வன்முறையாக மாறியதால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல்துறை அமைத்திருந்த தடுப்புகளை அவர்கள் மீற முயன்றனர்.
இதையடுத்து காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். நிலைமை மோசமானதால், காவல்துறை கண்ணீர்ப்புகை குண்டுகள், தடியடி மூலம் கூட்டத்தை கலைத்தது.
இதில் 118 காவலர்கள், 60 போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும், போராட்டத்தின் போது அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும், 20 அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..
இருப்பினும், தாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதாகவும், காவல்துறையே அளவுக்கு மீறிய வன்முறையை ஏவியதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை எங்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டோம். காவல் துறையின் வன்முறையால் மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இனி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்லமாட்டோம். ஆனால், ஜந்தர் மந்தரில் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்." என்று கூறினார்.