அமலாக்கத் துறை குழுவினர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா உட்பட நாட்டின் 15க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், வங்கத்தின் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு இணக்கமான ஐபேக் தேர்தல் உத்தி நிறுவனத்தின் நிறுவனர் பிரத்திக் ஜெயின் வீடும் அடக்கம்.
இந்த ஆட்சியில் முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கும் அரசாங்கத்துக்கும் முக்கிய தூணாக பிரத்திக் ஜெயின் விளங்கி வருகிறார். அடிக்கடி தலைமைச்செயலகத்துக்குச் சென்று முதலமைச்சரைச் சந்தித்து வருபவர், பிரத்திக். வரக்கூடியதேர்தலில் அவரின் ஐபேக் நிறுவனம் ஆட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஒரு பாலமாக இயங்கிவருகிறது.
இந்த நிலையில்தான் அவருடைய வீட்டில் அமலாக்கத் துறை தேடுதல் சோதனை நடத்தப்படுகிறது.
இந்த சூழலில், மமதா தனக்கே உரிய பாணியில் இன்று மதியம், சோதனை நடந்துகொண்டிருந்தபோதே பிரத்திக்கின் வீட்டுக்குச் சென்றார். பச்சைநிறக் கோப்புடன் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ”அவர்கள் என் கட்சியின் ஆவணங்களைப் பறிமுதல் செய்துகொண்டிருந்தார்கள். நான் அவற்றை மீட்டுக் கொண்டுவந்தேன். அவர்கள் ஹார்டு டிஸ்க்குகள், தொலைபேசிகளையும் எடுத்துச்சென்றனர். இது அரசியல் துன்புறுத்தல்.” என்று மமதா கூறினார்.
” இதுதான் அமலாக்கத்துறையின் வேலையா? எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலையும் ஹார்ட் டிஸ்க்கையும் அமித்ஷா திரட்டுகிறார். சிறுமைத்தனமான உள்துறை அமைச்சரால் நாட்டைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் என் கட்சி ஆவணங்களை எடுத்துச்செல்கிறார். இதே வகையில் நான் பா.ஜ.க. அலுவலகத்தை ரெய்டு செய்தால் என்ன ஆகும்? ஒரு பக்கம் மேற்குவங்கத்தில் வாக்காளர்களை அழித்துவருகிறார். தேர்தலை முன்னிட்டு என் கட்சியின் எல்லா விவரங்களையும் அவர்கள் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.” என்றும் மமதா கூறினார்.