ஐயோ... அமேசான் ஆர்டரில் நாக பாம்பு!

அமேசான் ஆர்டரில் வந்த நாகபாம்பு
அமேசான் ஆர்டரில் வந்த நாகபாம்பு
Published on

எந்தப் பொருளாக இருந்தாலும் அமேசான் போன்ற இணைய வணிக நிறுவனத்தில் ஆர்டர்செய்தால், தானாக வீட்டுக்கே கொண்டுவந்துவிடுவது ரொம்பவும் வசதியாகிவிட்டது. 

ஆனால், ஆர்டர் செய்யாத பொருள் அதுவும் கொடிய விஷம் கொண்ட நாகபாம்பை அமேசான் அனுப்பிவைத்தால்...?

உண்மைதான்... இப்படியொரு சம்பவம்தான் பெங்களூரில் நிகழ்ந்திருக்கிறது. 

பெங்களூர் சர்ஜாபூர் சாலை பகுதியில் வசிக்கும் தம்பதியர் இருவரும் மென்பொருள் பொறியாளர்கள். எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர் எனும் கருவியை அமேசானில் ஆர்டர் செய்த இவர்களுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சொன்ன நேரத்தில் டெலிவரிக்காரர் பொதியைக் கொண்டுவந்து கொடுத்துள்ளார். அதைத் திறந்துபார்த்ததுதான் தாமதம், அதற்குள்ளிருந்து ஒரு நாக பாம்பு தலையை வெளியே நீட்டியிருக்கிறது. 

அய்யோ அம்மா என தம்பதியர் போட்ட அலறலில் அக்கம்பக்கத்தவர்கள் கூடிவிட்டார்கள். ஒருமாதிரியாக அமேசான் பொதியை ஒரு வாளியில் போட்டு, பாம்பை அங்கிருந்து கவனமாக அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். 

உடனடியாக, அமேசான் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு அவர்கள் தெரிவிக்க, அவர்களோ வழக்கம்போல, ‘சாரி உங்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம். விரைவில் உங்களுடைய பொருளை உரியமுறையில் அனுப்பிவைக்கிறோம். முழுத் தொகையையும் திருப்பித் தந்துவிடுகிறோம்.” என்று பதில் கூறியிருக்கிறார்கள். 

இன்னமும் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் இருக்கும் தம்பதியர், “எப்படியாக இருந்தாலும் அமேசான் தரப்பில் பணத்தைத் திருப்பிக்கொடுத்துதான் ஆகவேண்டும். அது விசயமில்லை. டெலிவரிக்காரர் எங்கள் கையில்தான் அந்தப் பொதியைத் தந்தார். ஒருவெளை ஆள் இல்லாமல் வெளியில் வைத்திருந்தாலோ அல்லது வேறு யாரிடம் கொடுத்திருந்தாலோ இடையில் பாம்பு புகுந்திருக்கும் என்றுகூட சொல்லலாம். அப்படி எதுவும் நடக்கவில்லை என்கிறபோது, அமேசான்காரர்கள் எவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.” எனப் பொறுமித் தள்ளுகிறார்கள். 

“ இரவு நேரம்... இப்படி நடந்துவிட்டது எனச் சொல்லியும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேல் எந்த ஒரு உதவியையும் அமேசான் தரப்பில் செய்யவே இல்லை. நல்ல வேளை அந்தப் பாம்பு அந்தப் பொதிக்கு உள்ளேயிருந்து வெளியே வரமுடியாதபடி பேக்கிங் டேப் சுற்றப்பட்டு கெட்டியாக இருந்தது. நாங்களேதான் பிரச்னையை எதிர்கொண்டு தீர்த்துக்கொண்டோம். இது அப்பட்டமாக, வாடிக்கையாளரின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். அமேசான் கிடங்கிலோ போக்குவரத்து ஏற்பாட்டிலோ சரியான பாதுகாப்பு முறைகள் இல்லை என்பதைத்தான் இது நிரூபிக்கிறது. வாடிக்கையாளரின் பாதுகாப்பில் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் பாருங்கள்.” என பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தெரிவித்ததுடன், நடந்த நிகழ்வு முழுவதையும் வீடியோவாகவும் எடுத்து தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டார். 

அதன்பிறகு பிரச்னை பெரிதானதை அடுத்து, அமேசான் தரப்பில் விளக்கம் அளித்திருக்கிறார்கள். ஆனால், அந்த வாடிக்கையாளரோ, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்வளவு மோசமான அலட்சியத்தை அமேசான் தரப்பு சாவதானமாக பதில்சொல்லி கடந்துபோகிறார்கள்; இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்கிறார் சீற்றம் குறையாமல்!

சரிதானே! 

logo
Andhimazhai
www.andhimazhai.com