கெனிபென் தாக்கூர்
கெனிபென் தாக்கூர்

இப்படி ஒரு வேட்பாளரா…? பா.ஜ.க. கனவைத் தகர்த்த பெண் எம்.பி.!

மக்களவைத் தேர்தலில் பொது மக்களிடம் நிதி திரட்டி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட குஜராத் காங்கிரஸ் வேட்பாளர் கெனிபென் தாக்கூர் வெற்றி பெற்றிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் பா.ஜ.க. வின் கோட்டையாக கருதப்பட்ட வந்தது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால், அங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடிவில்லை. ஆனால், இம்முறை குஜராத்தில் கெனிபென் வெற்றியின் மூலம் காங்கிரஸ் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

குஜராத்தின் பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டவர் கெனிபென். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ரேகாபென் சௌத்ரியை விட 30, 406 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடினார். இதனால் குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் மூன்றாவது முறையாக கைப்பற்ற வேண்டும் என்ற பா.ஜ.க.வின் கனவு நிறைவேறவில்லை.

கெனிபென் தேர்தல் செலவுகளுக்கு காங்கிரஸ் கட்சி நிதி அளிக்காததால், அவர் தனது தொகுதி மக்களிடம் நிதி திரட்டியுள்ளார். அப்படி அவர் ரூ. 50 லட்சம் வரை திரட்டியதாகக் கூறப்படுகிறது.

கெனிபென் தாக்கூர் இதற்கு முன்னர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் பனஸ்கந்தா மாவட்டத் தலைவராகவும் இருந்தவர்.

தாக்கூர் சமூகத்தின் திருமணமாகாத பெண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் கோரிக்கை, திருமண பதிவுக்கு பெற்றோரின் கையெப்பம் கட்டாயமாக்கும் சட்டத்துக்கு கெனிபென் ஆதரவுத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com