மீனாட்சி நடராஜன் வேட்புமனு தள்ளுபடி- தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் முறையீடு

மீனாட்சி நடராஜன்
மீனாட்சி நடராஜன்
Published on

மத்தியப்பிரதேசத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல்ஆணையத்திடம் அக்கட்சியின் தரப்பில் இன்று முறையிடப்பட்டுள்ளது. 

நாடளவில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான 24 இடங்களுக்கு வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மூன்று இடங்களுக்கும் போட்டி நடக்கிறது.

இரண்டு இடங்களில் பா.ஜ.க.வும் ஓர் இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் காங்கிரஸ் சார்பில் அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவருடைய மனுவில், ஐதராபாத்தில் உள்ள வழக்கு பற்றிய விவரம் இல்லை எனக் காரணம்கூறி, வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.

நேற்று இரவே இதைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, அக்கட்சியின் சட்ட வல்லுநர் அபிசேக் சிங்வி தலைமையில் இன்று தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்தனர். மனுவைத் தள்ளுபடி செய்தது தேர்தல் சட்டத்துக்கு உட்பட்டது அல்ல என்றும் தள்ளுபடி செய்ததைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com