ராம்லீலா பேரணிக்கு தமிழக காங்கிரஸ் அழைப்பு!

Congress invites people for Delhi protest
தில்லி போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு
Published on: 

வருகிற நவம்பர் 1 ஆம் தேதி வரலாறு காணாத பேரணியை தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை கண்டித்து தலைநகர் டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் பின்னணியில் வாக்கை காப்போம் - நாட்டை காப்போம் என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கின்ற வகையில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் டெல்லி பேரணியில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், வணிகர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அணி திரண்டு வரும்படி தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார்.

நவம்பர் 1 இல் ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணி நடைபெறுவதற்கு பல்வேறு தடைகளை ஆளுங்கட்சியினர் ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த தடைகளை உடைத்து குறைந்தபட்சம் 10 லட்சம் பேரை திரட்டுகிற தீவிர முயற்சியில் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தலைநகர் டெல்லியில் நவம்பர் 1 இல் நடைபெறும் பேரணியின் குறிக்கோள் மத்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக பதவி விலக வேண்டும், சிறப்பு தீவிர திருத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தேர்தல் ஆணைய இணையதளம் புதுப்பிக்கப்பட வேண்டும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும், அதன் விவரங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.

பீகார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து சுயேட்சையான மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகள் நிறைவேறுகிற வரை எந்தவிதமான திருத்தமும், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளக் கூடாது. இதுவே தலைநகர் டெல்லியில் நடைபெறுகிற பேரணியில் தேர்தல் ஆணையத்தின் முன் வைக்கப்படுகிற கோரிக்கையாகும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது, தலைவர் ராகுல்காந்தி ஓயமாட்டார்.

தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை தடுத்து நிறுத்தாமல் தேர்தல்கள் நியாயமாக, நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், தேர்தல் ஆணையம், மோடி - அமித்ஷா - ஞானேஷ்குமார் ஆகியோரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெறுகிற பேரணிக்கு தமிழகத்திலிருந்து பெருந்திரளானவர்கள் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன். தலைநகர் டெல்லியில் அனைவரும் அணி திரண்டு வரும்படி மீண்டும் வலியுறுத்தி உங்களை அழைக்கிறேன்." என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram