சேதமடைந்த அரிய வகைச் செடி... ரூ.90,000 இழப்பீடு வழங்க உத்தரவு!

ஏர் ஏசியா விமானம்
ஏர் ஏசியா விமானம்
Published on

விமானம் தாமதமானதால் இணைப்பு விமானத்தைத் தவறவிட்ட கேரள விவசாயிக்கு ஏர் ஏசியா நிறுவனம் 90,000 ரூபாயை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த விவசாயி அப்துல் அஜீஸ் என்பவர் கலப்பின பலா மரக்கன்றினை வாங்குவதற்காக, கொச்சியிலிருந்து கோலாலம்பூர் வழியாக இந்தோனேசியாவுக்குப் பயணம் செய்துள்ளார்.

பலா மரக்கன்றை வாங்கிக்கொண்டு திரும்பும்போது, இந்தோனேசியாவின் கோலானாமுவிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லவிருந்த அவரது ஏர் ஏசியா விமானம் தாமதமானதால், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டி இருந்தது. இதனால், கோலாலம்பூரிலிருந்து கொச்சிக்குச் செல்லவேண்டிய தன்னுடைய விமானத்தை அவர் தவறவிட்டுள்ளார்.

அவர் வாங்கிவந்த கலப்பின பலா மரக்கன்றின் முக்கியத்துவத்தை விமான நிலைய அதிகாரிகளிடம் கூறி, மாற்று விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால், விமான நிலைய அதிகாரிகள் மூன்று நாள்களுக்குப் பிறகுதான் கொச்சிக்கு விமானம் என்று அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

விவசாயி அடுத்த நாளே தன் சொந்த முயற்சியில் வேறொரு விமானத்தில் கொச்சியை வந்தடைந்தார். ஆனால், அவர் எடுத்து வந்திருந்த கலப்பின பலா மரக்கன்று எதற்கும் உதவாத நிலைக்குச் சென்றுவிட்டது. இதையடுத்து, விவசாயி கேரள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த கேரள நுகர்வோர் நீதிமன்றம், ”ஏர் ஏசியா நிறுவனத்தின் அலட்சியப் போக்கால் விவசாயிக்கு பண இழப்பீடு ஏற்பட்டதுடன் மன உளைச்சலுக்கு அவர் ஆளாகியுள்ளார். ஏர் ஏசியா நிறுவனம் விவசாயின் முழு பயணத்திற்கான செலவான 30,750 ரூபாயுடன், தங்குமிடச் செலவுகளுக்காக 25,000 ரூபாயும் , சேவைக் குறைபாட்டிற்கான இழப்பீடாக 25,000 ரூபாயும் வழங்கவேண்டும்” என்றும், வழக்குச் செலவுகளுக்காக 10,000 ரூபாய் வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

அந்தத் தொகையை 45 நாள்களுக்குள் செலுத்தத் தவறினால் முழுத் தொகையும் வசூலாகும்வரை விமான நிறுவனம் மாதம் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com