சாம் பிட்ரோடா
சாம் பிட்ரோடா

பிட்ரோடா சர்ச்சை: காங்கிரசின் உறவை முறித்துக்கொள்ளுமா தி.மு.க.?- பிரதமர் மோடி

Published on

“தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக சாம் பிட்ரோடா கூறியிருக்கிறார். எனவே, தமிழர் பெருமையைக் காக்க காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா?” என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவராக இருந்த சாம் பிட்ரோடா சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் சீனர்கள் போலவும், மேற்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் ஆப்பிரிக்கர்கள் போலவும் உள்ளனர். ஆனாலும் நாம் அனைவரும் சகோதர, சதோதரிகள்" என கூறியிருந்தார்.

மக்களின் நிறம் குறித்து பிட்ரோடா இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிட்ரோடாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிறத்தின் அடிப்படையில் அவமானப்படுத்துவதை நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

இந்நிலையில், ஆந்திராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், சாம் பிட்ரோடாவின் கருத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு சவால் விடுத்தார்.

"தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாக சாம் பிட்ரோடா கூறியிருக்கிறார். எனவே, தமிழர் பெருமையை காக்க காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? கூட்டணியை முறிக்க அவருக்கு துணிச்சல் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி.

மேலும், சாம் பிட்ரோடாவின் கருத்து மராட்டிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, அண்மைக் காலமாக தேர்தல் தொடங்கிய பிறகு இராகுல்காந்தி, அம்பானி- அதானியைப் பற்றிப் பேசுவதே இல்லை என்றும் அவர்கள் இருவரும் இதற்காக எவ்வளவு தந்தார்கள் என்றும் பிரதமர் மோடி நேற்று தெலங்கானாவில் பேசினார். அவரின் இந்தப் பேச்சுக்கு பதிலளித்த இராகுல், அவர்கள் பணம் தந்தால் அமலாக்கத் துறையை அனுப்பி ரெய்டு நடத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com