இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம்

வாக்குக்கு லஞ்சம்: எம்.எல்.ஏ., எம்.பி.களுக்கு போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்- சி.பி.ஐ.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் வாக்களிக்க லஞ்சம் பெற்றவர்கள், வரும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செயலாளர், டாக்டர் கே நாராயணா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல்- லஞ்சம் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய ஒருமித்த தீர்ப்பைப் பாராட்டியுள்ளார்.

மேலும், “ உச்சநீதிமன்றத்தில் பி.வி. நரசிம்மராவ் -எதிர்- மத்திய புலனாய்வுத்துறை வழக்கில், 1998இல் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசாரணையிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசியல்சாசன அமர்வு, பழைய தீர்ப்பை ரத்து செய்து இருக்கிறது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய வழக்கில் பழைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அந்த எம்பிக்கள் மீது வழக்குத் தொடர முடியாதென பாதுகாப்பளித்தது. ஆனால், தற்போதைய வரலாற்றுத் தீர்ப்பு, ஒரு வாக்கெடுப்புக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் செயல்பாட்டையே பாதிக்கும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்த்திவாலா, சஞ்சய்குமார் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய ஏழு பேர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முடிக்கப்பட வேண்டும். நீதித்துறையில் ’தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்ற கோட்பாடு உள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளின் மீது விசாரணைகள் விரைவுபடுத்தப்படாவிட்டால், பல ஆண்டுகள் வாய்தா வாங்கிய நீட்டித்து விடுவார்கள்.

எனவே இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பவர்களை, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். அவர்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டால், மார்ச் 4 ஆம் தேதி தீர்ப்பின் நோக்கம் தோற்கடிக்கப்படும். நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகவோ அல்லது வாக்களிப்பதற்காகவோ லஞ்சம் வாங்குவது அப்பட்டமான குற்றமாகும்.

இவ்வாறு லஞ்சம் பெறுபவர்கள், கொடுப்பவர்களை எந்த விசாரணையும் தண்டனையும் தப்பித்துக் கொள்ள அனுமதித்தால், அது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் நமது அரசியல் சாசனத்தில் அடிப்படைகளையுமே தகர்த்து விடும்.” என்று டாக்டர் நாராயணா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com