
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் உமர் முகமது நபியின் ஜம்மு காஷ்மீர் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி செங்கோட்டை பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் முன் கடந்த 10ஆம் தேதி மாலை கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. ஐ.ஜி., இரண்டு டி.ஐ.ஜி., மூன்று எஸ்.பி.க்கள் மற்றும் டி.எஸ்.பி.கள் அடங்கிய 10 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை என்.ஐ.ஏ. அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு என்.ஐ.ஏ. ஏடிஜி விஜய் சாகரே தலைமை வகிக்கிறார்.
நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டி வந்தவர் உமர் முகமது நபி என்பது தெரியவந்துள்ளது.
சிசிடிவி காட்சிகள் மூலம் மருத்துவர் உமர் முகமது நபி அடையாளம் காணப்பட்டுள்ளார். இதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கக்கூடும் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
விசாரணையில் உமர் முகமது ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவைச் சேர்ந்தவர். இவர் உத்தரபிரதேச மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக்கல்லூரியில் மருத்துவராக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.
புலனாய்வு அமைப்பு டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமாவில் அமைந்துள்ள மருத்துவர் உமர் முகமது நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.