
தில்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா(UAPA) சட்டத்தின் கீழ், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்களின் புலனாய்வுக்கு தேசிய பாதுகாப்புப்படையினரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் உதவி வருகின்றனர்.
சம்பவ பகுதியில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) குழுவினர் விசாரணை நடத்தினர். தேசிய பாதுகாப்புப் படையினரும் சம்பவ பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றனர். தடயவியல் நிபுணர்கள் தனியாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காவல் துறையின் சிறப்புப்பிரிவினர் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் உடலில் பெல்லட் என்ற சிறிய குண்டுகள் அல்லது சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புக்கான பாதிப்புகள் இல்லாததாலும், சம்பவ இடத்தில் குண்டு வெடிப்புக்கான வயர்கள் தற்போது வரை கிடைக்காததாலும் இது குண்டுவெடிப்பு சம்பவமாக உடனடியாக உறுதி செய்யப்படவில்லை என்று தில்லி காவல் துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில், தில்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா(UAPA) சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.