நாட்டையே உலுக்கியெடுத்து வரும் ஜந்தர் மந்தர் போராட்டத்தை அடுத்து, இனிமேல் அங்கு போராட்டமே நடத்தமுடியாது என தில்லை காவல்துறை அறிவித்துவிட்டது.
தில்லி ஜந்தர் மந்தரில் அதிகாரபூர்வமாக போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்த ஆணை திரும்பப்பெறப்பட்டு உள்ளது.
கடந்த 1998ஆம் ஆண்டு, தில்லியில் உள்ள இராஜபாதை பகுதியில் மாபெரும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போராட்டம் நடத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த இடத்தைப் போராட்டம் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வமான இடமாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் கரப்பான் கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, கரப்பான் கட்சியினர், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது, இளைஞர்கள், காவலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
தற்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கரப்பான் கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி வருகின்றனர்.
இந்நிலையில், தில்லி காவல்துறை இதுதொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், " தில்லியில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றாக வேறு இடங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்திருந்தது.
அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தருக்குப் பதிலாக, தில்லியில் உள்ள ராம்லீலா மைதானம், புராடி மைதானம், சி.பி.டி. மைதானம் ஆகிய மூன்று இடங்கள் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்படுகின்றன." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.