டெல்லி: நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்துக்கு சீல்!
டெல்லியில் உள்ள ‘நியூஸ்கிளிக்’ இணைய செய்தி நிறுவனத்துக்கு டெல்லி போலீஸாா் நேற்று சீல் வைத்தனர்.
சீன சார்பு கொள்கையைப் பரப்புவதற்காக அந்நாட்டு நிறுவனங்கள் சார்பில் நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனத்துக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் செய்தியாளர்கள் மற்றும் ஊழியா்களுக்குச் சொந்தமான 30 இடங்களில் அதிகாலை முதல் தீவிர சோதனை நடத்திய போலீஸாா், பின்னர் அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்து மூடினர்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் தரப்பில் கூறுகையில், “செய்தி நிறுவனத்துக்கு எதிராக யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை அந்த நிறுவன செய்தியாளா்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதன் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பிரபீா் புா்காயஸ்தாவை தெற்கு டெல்லியில் அமைந்துள்ள நியூஸ்கிளிக் அலுவலகத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்று ஆதாரங்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டனா்” என்றனா்.
மேலும், ஊா்மிலேஷ், அபிஷா் சா்மா, அனிந்தியோ சக்கரவா்த்தி, பரன்ஜோய் குஹா தாக்குா்தா, சொஹயில் ஹாஷ்மி, டி.ரகுனந்தன் உள்ளிட்ட அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சில செய்தியாளா்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவா்களிடம் 25 கேள்விகளைக் கொண்ட பட்டியலுடன் விசாரணை நடத்தப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்தி நிறுவனத்தில் டெல்லி போலீஸாரின் சோதனைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளும், இந்திய பத்திரிகையாளர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளன.