டைனோசர்
டைனோசர்

ராஜஸ்தானில் தாவர உண்ணி டைனோசர்கள்!

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசர்கள் பற்றிய ஒவ்வொரு தகவல்களும் வியப்பை ஏற்படுத்துபவை. டைனோசர்கள் பூமி முழுவதும் வாழவில்லை என்ற கருத்து நிலவும் சூழலில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மிகவும் பழமையான டைனோசரின் படிமங்கள் கிடைத்துள்ளன. இவை மிகவும் புதிய இனத்தைச் சேர்ந்தவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஐடி-ரூர்க்கி, இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் சேர்ந்து, ஜெய்சால்மரில், நீண்ட கழுத்தைக் கொண்ட- தாவரங்களை உண்ணும் டைக்ரேயோசொரிட் டைனோசரின் பழமையான புதைபடிவ எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த டைனோசர்கள் வடக்கு, தெற்கு அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளில்தான் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. முதல்முறையாக தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சி முடிவு நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசரின் படிமங்கள் 167 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், இதுவரை இவ்வளவு பழமையான படிமத்தை விஞ்ஞானிகள் கண்டறியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் 166 முதல் 164 மில்லியன் ஆண்டுகள்வரை பழமையான டைனோசர் படிமங்கள்தான் கண்டறியப்பட்டுள்ளன. அதுவும் சீனாவில் கண்டறியப்பட்ட டைகிரியோசாரிட் வகை டைனோசர்கள்தான் மிகவும் பழமையானது என கூறப்பட்டுவந்ததை, இந்தக் கண்டுபிடிப்பு முறியடித்துள்ளது.

அதேபோல், ஜெய்சால்மர் பகுதியில் டைனோசர்கள் கூட்டமாக வாழ்ந்ததற்கான அடையாளமும் இருப்பதாக இக்குழுவினர் கூறியுள்ளனர். ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தை நினைவுபடுத்தும் விதமாக, இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசரின் படிமத்திற்கு ’தாரோசரஸ் இண்டிகஸ் (Tharosaurus Indicus) எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய ஐஐடி ரூர்கியை சேர்ந்த பேராசிரியர் சுனில் பாஜ்பாய், ”கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் படிமங்கள் தொடர்பான ஆராய்ச்சித் திட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான படிமத்தைக் கண்டறிந்துள்ளோம்.” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com