டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு- 8 பேர் பலி!

டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு- 8 பேர் பலி!
Published on

நாட்டின் தலைநகர் புதுடெல்லி செங்கோட்டை இரயில் நிலையம் அருகே இன்று மாலையில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்தக் கோர சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோரைப் பற்றிய மேலதிக விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை. 

சம்பவமானது, செங்கோட்டை மெட்ரோ இரயில் நிலையத்தையொட்டிய பகுதியில் நேர்ந்துள்ளது. 

அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாக புதுதில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. 

பெருங்கடைவீதி அமைந்துள்ளதும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுவதுமான சாந்தினி சௌக் பகுதிக்கு அடுத்த நிறுத்தம் இது. எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பிய பகுதியும்கூட. 

“இது சக்திவாய்ந்த குண்டுவெடிப்பாக இருந்தது. எப்போதும் கூட்டம் வழியும் இந்தப் பகுதியில் எத்தனை பேர் காயம்பட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப்பார்க்கவே கஷ்டமாக உள்ளது. நெரிசலிலும் ஏராளமானவர்கள் சிக்கியிருப்பார்கள்.” என்று நேரில் பார்த்த சாட்சியான மோசின் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.  

"மெதுவாக ஊர்ந்துசென்ற கார் சிவப்பு விளக்கு போடப்பட்டதும் நின்றது; அதைத்தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது; அந்தக் காரில் இரண்டுமூன்று பேர் இருந்திருப்பார்கள்; சம்பவம் சுமார் 6.52 மணிக்கு நேர்ந்துள்ளது.” என்று புதுடெல்லி காவல்துறை ஆணையர் சதிஷ் கோல்ச்சா ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.  

இந்தத் துயர சம்பவத்தை அடுத்து, மைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் அழைத்து  விவரங்களைக் கேட்டறிந்தார். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். 

டெல்லி சம்பவத்தால், மும்பை நகரத்துக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com