தந்தையர் தின வைரல்... ஐ.சி.யு.வில் நடந்த திருமணம்!
மேள தாளம் முழங்க, அட்சதை தூவி நடைபெறும் திருமணங்களைத்தான் பார்த்திருப்போம். ஆனால், இதில் எதுவுமே இல்லாமல் இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற திருமணம் மனதை நெகிழ வைக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ சவுக் பகுதியில் வசித்துவருபவர் முகமது இக்பால். 51 வயதான இவர், தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார்.
திருமண வேலைகளில் இருந்தவருக்கு, திடீரென சில நாள்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. குடும்பத்தார் அவரை லக்னோவில் உள்ள ஈரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இக்பால் சேர்க்கப்பட்டார். தொடர்ந்தும் அங்கேயே இருக்கவேண்டும் என மருத்துவர்கள் கறாராகச் சொல்லிவிட்டனர்.
இக்பாலுக்கோ மனம் பொறுக்கமுடியவில்லை. தனக்கு உயிர் போய்விடுமோ, எங்கே தன் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தமுடியாமல் போய்விடுமோ என அவர் மனம் வாடியது.
தன் உடல்நிலை எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும், மகள்களின் திருமணத்தை முன்கூட்டியே நடத்தி முடித்துவிடலாம் என வீட்டுக்குச் செல்ல விரும்பினார்.
ஆனால், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவரை வீட்டுக்கு அனுப்பினால் ஆபத்து என மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மறுத்துவிட்டனர்.
மனம் உடைந்து போன இக்பால், மருத்துவர்களிடம் கவலையோடு பேசியுள்ளார். அவரின் மனத்தாங்கலைக் கேட்ட மருத்துவமனை நிர்வாகம், ஒரு முடிவுக்கு வந்தது.
முறையான பாதுகாப்போடும் மற்ற நோயாளிகளுக்குத் தொந்தரவு கொடுக்காமலும் மருத்துவமனையிலேயே திருமணத்தை நடத்த அனுமதி அளித்தனர்.
இஸ்லாமிய முறைப்படி அங்கேயே திருமணம் நடைபெற்றது. அதில் இக்பால், மணமக்கள், மருத்துவர்கள், மத குரு ஒருவர் மட்டுமே பங்கேற்றனர்.
மணமக்கள் மருத்துவ கவச உடை மட்டுமே அணிந்திருந்தனர்.
மிக எளிமையான முறையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் நடைபெற்ற இந்த நிக்கா, கடந்த 15ஆம் தேதியே நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனாலும் நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, இந்தத் திருமணக் காட்சி வீடியோ சமூக ஊடகத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்டது. அத்துடன் மட்டுமில்லாமல் ஏராளமானவர்களால் பகிரப்பட்டு பார்க்கும் அனைவரையும் நெகிழச் செய்கிறது.
தந்தை – மகள் பாசத்தை வெளிப்படுத்தும் இந்தத் திருமணம், சமூக ஊடகத்தில் வேற லெவலாக மாறிப்போனது!