மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காத காரணத்தால் முதியவர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து கடந்த 12ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பாபு பட்டேல் (80), நர்மதா பென் (76) தம்பதிகள் மும்பை வந்தார். அவர்கள் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே 2 சக்கர நாற்காலிக்கும் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், மும்பை வந்தவுடன் சக்கர நாற்காலி பற்றாக்குறை காரணமாக அவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மனைவியை மட்டும் நாற்காலியில் செல்லுமாறு கூறி விட்டு, பாபு பட்டேல் இமிகிரேஷன் கவுன்ட்டருக்கு நடந்து சென்றார். அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சக்கர நாற்காலி இல்லாததால் பயணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டு இருந்தது. ஏர் இந்தியாவின் விளக்கம் ஏற்கும் படியாக இல்லை என கூறிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.