தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், நீர்வீழ்ச்சி பகுதிகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை முன்னெச்சரிக்கை செய்கிறது இந்த சம்பவம்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் ஹடப்சர் பகுதியைச் சேர்ந்தவர்கள் லியாகாத் அன்சாரி, யூனுஸ் கான். இவர்கள் இருவரும் தங்களின் குடும்பத்தினருடன் நேற்று லோனாவாலாவில் உள்ள புஷி அணை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுலா சென்ற 18 பேரில் பத்து பேர் நீர்வீழ்ச்சியின் அருகில் சென்று நின்றுகொண்டிருந்தனர். அப்போது, நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகமாக வரத் தொடங்கியதால், ஐந்து பேர் எப்படியோ பத்திரமாகக் கரைக்கு வந்தனர். மீதியிருந்த 5 பேரால் கரைக்கு வர முடியவில்லை. வெள்ளத்தின் நடுவே ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் அவர்கள் சிறிது நேரத்திலேயே தண்ணீரில் அடுத்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்த போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அவர்களை காப்பாற்ற இயலவில்லை. தற்போது ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளின் சடலங்களை மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஷாஹிஸ்தா அன்சாரி (36), அமிமா அன்சாரி (13), உமேரா அன்சாரி (8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற இருவரான அட்னான் அன்சாரி (4), மரிய சையத் (9) ஆகிய இருவரையும் தொடர்ந்து தேடிவருகின்றனர்.
இந்நிலையில், ஷாஹிஸ்தா அன்சாரி உள்ளிட்ட 5 பேரும் தண்ணீரில் அடுத்துச் செல்லப்பட்ட, அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.