முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடக மாநில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அவர்கள் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்களை பாலியல் கொடுமை செய்தது தொடர்பாக கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் புகார் எழுந்தது. கர்நாடகத்தையே அதிரச்செய்த இந்த விவகாரத்தில் முதலில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என தேவகவுடாவின் குடும்பத்தினர் சமாளித்தார்கள்.
ஆனால், அடுத்தடுத்த புகார்கள் காரணமாக, ஒரு கட்டத்தில் தேவகவுடா தன் பேரன் மீது தவறு இருந்தால் தண்டனை கிடைக்கட்டும் என்று கூறும்படி ஆனது.
இதனிடையே வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பிரஜ்வல், கைதுசெய்யப்படுவது உறுதி எனத் தெரிந்ததும் கர்நாடகத்துக்குத் திரும்பினார். விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்ட அவர் மீது விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டது.
இதில், நேற்று அறிவிப்பு வெளியிட்ட பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பிரஜ்வல் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தியது.
இன்று அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.