அதிக ஆண்டுகள் பாஜக தலைவராக இருந்தவர் கட்சியில் இருந்து திடீர் விலகல்...

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன்
Published on

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் கட்சியிலிருந்து இன்று விலகியுள்ளார்.

புதுவை மாநிலத்தின் பாஜக தலைவராகச் சாமிநாதன் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார். 8 ஆண்டுகள் அவர் அந்த பொறுப்பில் இருந்தார். வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவர் மாற்றம் நடப்பது வழக்கம். ஆனால், அதிக காலம் அவர் இப்பதவியை வகித்து வந்தார். கடந்த 2023 செப்டம்பரில் அவர் மாற்றப்பட்டார். அதையடுத்து அவர் கட்சி செயல்பாட்டைக் குறைத்துக்கொண்டார்.

இந்நிலையில், பாஜகவிலிருந்து விலகுவதாகச் சாமிநாதன் இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் இருந்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிக் கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் பாரதிய ஜனதா கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். நான் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், எனக்குப் பதவி அளித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும், புதுச்சேரி மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், ஊழலற்ற நேர்மையான புதியவர்களைக் கொண்டு புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com