திருப்பிவிடப்படும் ஆய்வுக்கட்டுரைகள்... அண்ணா பல்கலை. உலக அளவில் முதலிடம்!

161 research articles of anna university retracted
ஆய்வுக் கட்டுரைகள் திரும்பப் பெறப்படுகின்றன.AI generated
Published on: 

உலகளவில் அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஆய்வுக் கட்டுரைகள் திரும்பப் பெறப்படுவதில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

'இந்தியா டுடே' வெளியிட்டுள்ள பகுப்பாய்வின்படி, 2025-ஆம் ஆண்டுக்கான 'ரிட்ராக்சன் வாட்ச்' வெளியிட்டுள்ள தரவில், உலக அளவில் அதிக ஆய்வுக் கட்டுரைகள் திரும்பப் பெறப்பட்ட முதல் 10 பல்கலைக்கழகங்களில் 6 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்தப் பட்டியலில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் 161 ஆய்வுக் கட்டுரைகள் திரும்பப் பெறப்பட்டதன் மூலம் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

சவிதா மருத்துவ - தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம்  159 ஆய்வுக் கட்டுரைகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் பிரபலமான தனியார் பல்கலைக்கழகங்களான வி.ஐ.டி. வேலூர் (48 திரும்பப் பெறப்பட்ட கட்டுரைகள்), எஸ்.ஆர்.எம் அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனம் (38 திரும்பப் பெறப்பட்ட கட்டுரைகள்) ஆகியவையும் கடந்த ஆண்டுகளில் அதிக அளவிலான ஆய்வுக் கட்டுரைகள் திரும்பப் பெறப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் மொத்த ஆய்வுக் கட்டுரைகள் திரும்பப் பெறும் எண்ணிக்கை 887ஆக உள்ளது. 1,701 ஆய்வுக் கட்டுரைகளுடன் முதலிடத்தில் உள்ள சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அளவில் 5% ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமே இந்தியா சமர்ப்பிக்கும் நிலையில், திரும்பப் பெறப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் உலகளவில் 21% இந்தியாவைச் சேர்ந்தவையாக உள்ளது.

இதுகுறித்து இந்திய 'ரிசர்ச் வாட்ச்' நிறுவனத்தின் நிறுவனர் அச்சல் அகர்வால் கூறுகையில், "ஆராய்ச்சியின் தரம், நேர்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதிக ஆய்வுக் கட்டுரைகள் திரும்பப் பெறப்படும் பல்கலைக்கழகங்களை கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுத்துவதுடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆய்வுக் கட்டுரைகள் திரும்பப் பெறப்படுவதற்கு, தவறான தகவல்களைப் பதிவிடுதல், பிளேகரிஸம், தவறான மதிப்பாய்வு ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.

உலக அளவில் இந்திய பல்கலைக்கழகங்கள் சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் ஒருபக்கம் முன்னேறி வரும் நிலையில், மறுப்பக்கம் சில பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள் இந்திய பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சித் தரத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com