குதிரை நூலகம்
குதிரை நூலகம்

மலைக் குழந்தைகளை மகிழ்விக்கும் 'கோதா லைப்ரரி' குதிரை நூலகம்...!

சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கிப்போனாலும், எந்த வண்டியும் செல்லமுடியாதபடி தடைபட்டாலும், மக்களின் வெளியூர்த் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், பள்ளிகள் இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டாலும், குதிரை நூலகத்துக்கு மட்டும் எந்தத் தடையும் இல்லை.

அதென்ன குதிரை நூலகம்?

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால், ருத்ரபிரயாக், தெஹ்ரி கட்வால், ஜான்பூர் ஆகிய நான்கு மாவட்ட மக்களின் விருப்பத்துக்கு உரிய ஒன்றாக மாறிநிற்கிறது, கோதா லைப்ரரி எனப்படும் குதிரை நூலகம்.

குறிப்பாக, நைனிடால் மாவட்டத்தில் உள்ள மலைகிராமங்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக பத்து மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கும். சாலைகள் ஒழுங்கான வடிவத்திலேயே இருப்பதில்லை என்பது இயல்பாகிவிட்டது. குடிப்பதற்கு நல்ல தண்ணீர் அங்கு கிடைப்பது அரிதாக இருக்கிறது.

இந்த நிலையில், இயற்கைச் சீற்றம், மின்சாரம் இல்லாமை போன்றவற்றால் அப்பகுதி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது தொடர் கதை ஆகிவிட்டது. இதைப் பார்த்த உள்ளூர் இளைஞர்கள் சிலர், தன்னார்வமாக குழந்தைகளுக்கு நூல்களை எடுத்துச்சென்று வழங்கும் பணியில் இறங்கினார்கள். மிதிவண்டிகளிலும் மோட்டார் வண்டிகளிலும் சென்றவர்களுக்கு, அண்மைக்காலமாக அங்கு பெய்துவரும் திடீர் மழை, நிலச்சரிவு காரணமாக மலைப் பகுதி கிராமங்கள் மற்ற பகுதிகளுடன் தொடர்பே இல்லாமல் போய்விடுகின்றன.

கிராம மக்களே இளைஞர்களின் முயற்சிக்குக் கைகொடுக்க முன்வந்தனர். தங்களிடம் உள்ள குதிரைகளை வாரத்துக்கு ஒருவர் புத்தகங்களை எடுத்துச் செல்வதற்காக, கொடுத்தனர்.

கடந்த ஜூன் மாதம் பருவ மழை தொடங்கியது முதல், நைனிடால் மற்ற பகுதிகளிலிருந்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்களின் புத்தக வாசிப்புக்கு பெரிய தடை எதுவும் ஏற்படவில்லை. தற்போது, இளைஞர்களின் முயற்சிக்காக 10 குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன. 20 பேர் கல்வி ஊக்குநர்களாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலும் மாணவர்களுக்கு கதை, கவிதை புத்தகங்களே கொடுக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு புத்தகம் என சுழற்சி முறையில் தரப்படும். அதைப் படித்துவிட்டு இன்னொரு புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம்.

வாரத்திற்கு ஒரு முறை புத்தகங்களை எடுத்துவரும் குதிரையைப் பார்ப்பதே, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார்கள், தன்னார்வலர்கள். குதிரை நூலகம் என கழுத்தில் பட்டையாகத் தாங்கிவரும் குதிரையின் முதுகில் அழகான முறையில் புத்தகங்களை எடுத்துக்கொள்ளும்படி போர்த்தியவாறு வைத்திருக்கிறார்கள். அவற்றில் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை குழந்தைகள் எடுத்துக்கொள்கின்றனர்.

புத்தகங்களைக் கொண்டுவரும் கல்வி ஊக்குவிப்பாளரும் பிள்ளைகளும் புல்வெளியில் ஒன்றாக அமர்ந்து, புத்தகங்களைப் படிக்கிறார்கள். தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி விவாதிக்கவும் செய்கிறார்கள்.

இந்தக் குதிரை நூலகத்தை, நைனிடால்வாசியான 29 வயது சுபம் பதாமி முன்முயற்சியாகத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இப்போது அவரைப் போன்ற பல தன்னார்வலர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் உழைப்புடன், ஹிமோத்தான், சங்கல்ப் இளைஞர் அமைப்பு ஆகிய அமைப்புகளும் புத்தகச் செலவை ஏற்றுக்கொண்டு இதில் பங்களிக்கின்றன.

இதன் மூலம் நான்கு மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய மலை கிராமங்களில், மாணவர்களிடம் படிப்பு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அத்துடன் நிற்காமல், பெரும்பாலும் படிக்க அனுப்பப்படாத பெண்கள் தங்கள் பிள்ளைகள் மூலமாக புத்தக வாசிப்பில் ஈடுபாடு கொண்டிருப்பது, இந்தத் திட்டத்தின் பெரிய சாதனை என்றே சொல்லலாம்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com