Gopichand Thotakura
கோபிசந்த் தோட்டகுரா

விண்வெளிக்கு சுற்றுலா போய் வந்த முதல் இந்தியர்... யார் அவர்?

Published on

விண்வெளிக்கு சுற்றுலா சென்று திரும்பிய தொழிலதிபர் கோபிசந்த் தோட்டகுராவுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலாவிற்கு தொடர்ந்து அழைத்துச் செல்கிறது. கடந்த ஆறு முறை விண்வெளி சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்த இந்நிறுவனம், ஏழாவது முறையாக ஆறு பேர் கொண்ட குழுவை விண்வெளி சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் கோபிசந்த் தோட்டகுராவும் ஒருவராவார். இவர் நேற்று முன்தினம் டெல்லி திரும்பிய நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விண்வெளி சுற்றுலா பயண அனுபவம் குறித்து தோட்டகுரா கூறுகையில், “இது நீண்ட காலமாக எதிர்பார்த்த உணர்வு. வீடு திரும்பியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது இந்தியாவுக்கும் மிகவும் பெருமையான தருணம். நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்." என்றார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா தான் கோபிசந்த் தோட்டகுராவுக்கு சொந்த ஊர். 30 வயதான இவர், அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஏரோநாட்டிக்கல் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார். இவரது குடும்பத்தில் விமானிகள் உள்ளதால், சிறு வயதிலிருந்தே விமானங்களில் பறப்பது இவருக்கு பிடித்தமான ஒன்று. விமானப் பயணத்தில் அதீத ஆர்வம் கொண்ட கோபிசந்த் தனது எட்டாவது வயதில், கேஎல்எம் என்ற விமானத்தின் காக்பிட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். மேலும், இவர் வணிக ரீதியிலான ஜெட் விமானங்கள் மட்டுமல்லாது, உலக அளவில் மருத்துவ சேவைக்கான ஜெட் விமானங்களையும் இயக்கும் வல்லமை படைத்தவர். இவர் ப்ரிசர்வ் லைஃப் கார்ப் என்ற நிறுவனத்தைத் தொடங்கி வளர்ந்து வரும் தொழிலதிபராகவும் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து விமானங்களை இயக்குவது, ஏரோபாட்டிக்ஸ், புஷ் பைலட்டிங், ஹாட் ஏர் பலூனிங் மற்றும் சீப்ளேன் ஆபரேஷன்ஸ் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்துள்ளார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு, இந்தியாவின் இராணுவ விங் கமாண்டராக பணியாற்றிய ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார். இவருக்கு அடுத்ததாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கோபிசந்த் தோட்டகுரா.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com