ஜிஎஸ்டி அதிரடி.. அந்த கிரீம் பன்னுக்கு வரி என்ன தெரியுமா?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்லமா சீதாராமன்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்லமா சீதாராமன்
Published on

ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் அதிரடியாக 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56ஆவது கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22ஆம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% ஜிஎஸ்டி அடுக்குகளில் 12% மற்றும் 28% நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், ஆடம்பர பொருட்களுக்கு 40% சிறப்பு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதி சுமையை பெரிய அளவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை வரும் 22ஆம் தேதி முதல் குறையும். இது மக்களுக்கு நேரடியாக பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஆடம்பரப் பொருட்களுக்கு கூடுதல் வரி வசூலிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அறிவிப்பால் விலை குறையும் பொருட்கள் பட்டியல் இதோ...

வரிகுறையும் பொருட்கள் (5%)

ஹேர் ஆயில், கழிவறை சோப்பு, சோப்பு பார்கள், ஷாம்புகள், பல் துலக்கும் பிரஷ், பற்பசை, சைக்கிள்கள், சமையலறைப் பாத்திரங்கள்.

நாப்கின், டயாபர், புஜ்ஜியா, சாஸ்ட்கள், பாஸ்தா, உடனடி நூடுல்ஸ், சாக்லேட்டுகள், காபி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்ன்பிளக்ஸ், வெண்ணெய், நெய்.

பாட்டில் குடிநீர், பழஜூஸ்கள், பிஸ்கட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், தையல் எந்திரம், குடைகள், உலர் பழங்கள், உறைந்த காய்கறிகள்.

உரம், பூச்சிக்கொல்லி, டிராக்டர், அறிவடை எந்திரங்கள், உரம் தயாரிக்கும் எந்திரங்கள்.

வரிகுறையும் பொருட்கள்(18%)

ஏ.சி. இயந்திரங்கள், டிவிக்கள், பாத்திரம் கழுவும் எந்திரங்கள், சிறிய கார்கள், 350சிசிக்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சிமெண்ட்.

40% சிறப்பு வரி

சிகரெட், புகையிலை, பான் மசாலா மற்றும் சொகுசு கார்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கு 40 சதவீத சிறப்பு வரி அடுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 5 % சதவீதம் ஜிஎஸ்டி வரி இருந்த பொருட்கள் இதன் மூலம் வரி விலக்கு பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்த ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன்
கிரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்த ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன்

கிரீம் பன் சர்ச்சை

கடந்த ஆண்டு கோவையில் ஓட்டல் அன்னபூர்ணா அதிபர் சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கிரீம் பன்னுக்கு விதவிதமான வரி விகிதங்கள் இருப்பது பற்றி குறை கூறியது பெருமளவுக்கு சர்ச்சையானது நினைவிருக்கலாம். இதுவரை கிரீம் பன்களுக்கு 18 சதவீதம் வரி இருந்தது. கிரீமுக்கும் பன்னுக்கும் தனித்தனியாக 5% வரிகள் இருந்துவந்தன.

இந்த வரி விகித மாற்றங்களுக்குப் பின்னால் கிரிம் பன்னுக்கு 5% ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கப்படும்! கிரீம் பன் சுவைப்பவர்களே.. இப்ப சந்தோசமா?

logo
Andhimazhai
www.andhimazhai.com