இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஸ்குமார், சுக்பீர் சாந்து தேர்வு- நாளை வழக்கு என்னவாகும்?

தலைமைத் தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு தேர்தல் ஆணையர் பணியிடங்களுக்கு ஞானேஸ்குமார், சுக்பீர் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கூட்டத்துக்கு முன்னர் ஐந்து பேரையாவது கொண்ட ஒரு பட்டியலைத் தனக்குத் தருமாறு கேட்டதாகவும் ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்றும் அவர் கூறினார். 

”நேற்று இரவு முடிந்து இன்றைய காலை தொடங்கும் வேளையில் 212 பேருடைய பட்டியலை என்னிடம் அளித்தார்கள். அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு, இன்று மதியம் 12 மணிக்கு பிரதமர் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்துக்குள் இரண்டு பேரைத் தேர்வுசெய்ய என் மூளை எப்படி வேலைசெய்ய முடியும்?” என்று ஆதிர் ரஞ்சன் கேள்வி எழுப்பினார். 

முன்னாள் உயர் அதிகாரிகளான உத்பல் குமார் சிங், பிரதீப் குமார் திரிபாதி, ஞானேஷ் குமார், இந்தேவர் பாண்டே, சுக்பீர் சிங் சந்து, சுதிர் குமார் கங்காதர் ரஹாதே ஆகிய ஆறு பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, இருவரின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டன என்றும் அவர் கூறினார். 

முன்னதாக, கடந்த மாதத்தில் ஆணையர்களில் ஒருவரான அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெற்றார். அவரைத் தொடர்ந்து, ஏற்கெனவே நியமனத்தில் சர்ச்சைக்கு உள்ளான அருண் கோயல் அண்மையில் பதவிவிலகியதால், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் காலியானது. 

அந்தக் காலியிடங்களை நிரப்ப, புதிய திருத்தச் சட்டப்படி பிரதமர், ஓர் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் கூடி முடிவுசெய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த ஆண்டு சட்டம் திருத்தப்படாதவரை, தேர்தல் ஆணையரைத் தேர்வுசெய்யும் குழுவில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவருடன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் இடம்பெறுவார். அதை மாற்றியமைத்து ஆளும் கட்சியே அதாவது பிரதமரே தேர்தல் ஆணையரைத் தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளதால், இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருக்கிறது என மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் வழக்கு தொடுத்துள்ளார். 

நாளை அது விசாரணைக்கு வருகிறது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com