பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடலில், “விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் அனுமார்” என்று பா.ஜ.க., எம்.பி. அனுராக் தாக்குர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இமச்சல் பிரதேசம் ஹமீர்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர், தேசிய விண்வெளி நாளையொட்டி, உனாவில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய காணொலியை அனுராக் தாக்குர் அவரது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், முதல் விண்வெளி வீரர் யார்? என்று அனுராக் கேள்வி கேட்க, அதற்கு மாணவர்கள் ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ என ஒருமித்த குரலில் பதில் சொல்லியிருக்கின்றனர். உடனே அனுராக் தாக்குர், ‘அனுமார் தான் முதல் விண்வெளி வீரராக இருக்க முடியும்’ என நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் அறிவியலுக்கு புறம்பாக பேசுவது இது முதல் முறை இல்லை என்றாலும், மாணவர்கள் கூறிய பதிலை மறுத்து மூடநம்பிக்கையை வளர்க்கும் பதிலை அனுராக் தாக்கூர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?
விண்வெளிக்கு முதன்முதலில் பயணம் மேற்கொண்டவர் என்ற பெருமையை ரஷ்யாவை சேர்ந்த யூரி ககாரின் பெற்றுள்ளார். கடந்த 1961இல் அவர் பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் 1969இல் நிலவில் தரையிறங்கினார் அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங்.