பிரதமரின் சுதந்திர தின உரை… 10 முக்கிய அம்சங்கள்!
பிரதமர் மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில், வங்கதேச வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஒரே நாடு ஒரே தேர்தலின் தேவை, பொது சிவில் சட்டம் ஏன் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார்.
நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இது அவரின் 11ஆவது சுதந்திர தின உரையாகும்.
பிரதமர் மோடி பேசியதில் உள்ள சில அம்சங்கள்…
2047இல் வளர்ச்சி அடைந்த இந்தியா
‘வளர்ந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. இதற்காக பலதரப்பட்ட மக்கள் உழைத்து வருகின்றனர். அன்று 40 கோடி மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றினார். தற்போதுள்ள 140 கோடி பேர் தேசத்தை வல்லரசு ஆக்க வேண்டும்.
உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை இந்தியா விரைவில் அடையும். ‘வளர்ந்த பாரதம் 2047’ இலக்கை அடைய நாம் 24x7 உழைக்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
அரசியல் ஒற்றுமைக்கான முயற்சியில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது என்றார்.
பொது சிவில் சட்டம்
சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மையை உறுதிப்படுத்த பொதுசிவில் சட்டம் மிகவும் அவசியமானதாகும். மத பாகுபாட்டை களைய மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் தேவை.
நாளந்தாவுக்கு புத்துயிரூட்டுதல்
பண்டைக்கால நாளந்தா பல்கலைக்கழக உணர்வுக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று தெரிவித்த பிரதமர், உயர்கல்வி கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக மாற்ற வேண்டும் என்றார். 2024-ல் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தொடங்கியிருப்பதில் இது அடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
பேரிடர்
கடந்த சில ஆண்டுகளில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு கவலை அளிக்கிறது. பலர் குடும்ப உறுப்பினர்களையும் சொத்துக்களையும் இழந்துள்ளனர். மேலும் நாடும் குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்துள்ளன.
விண்வெளி ஆய்வு
விண்வெளித் துறை முக்கியமானது. நாங்கள் பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளோம். இன்று, பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தத் துறையில் பங்களிக்கின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனை அளிக்கிறது. இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம்.
மருத்துவ கல்வி
அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ கல்வி பயில்வதற்கான இடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் நம் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டிய அவசியம் இருக்காது.
ஒலிம்பிக்
2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த வேண்டுமென்பது நமது கனா. இந்த நேரத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற நம் வீரர், வீராங்கனைகளை வாழ்த்துகிறேன்.
வங்கதேச வன்முறை
அண்டை நாடான வங்கதேசத்தில் நடந்த நிகழ்வுகள் கவலை அளிக்கிறது. அங்கு நிலைமை விரைவில் சீராகும் என நம்புகிறேன்.