
நாட்டின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட விஸ்வ இந்து பரிஷத் பஜ்ரங் தள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளியை அடித்து உடைத்துள்ளனர். கடைகளில் இருந்த கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான பொருட்களையும் சூறையாடியுள்ளனர்.
அதேபோல் நேற்று இரவு, கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நூராநாடு என்னும் ஊரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக – ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதற்கு முன்னதாக, வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இந்துத்துவா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் இந்துத்துவா அமைப்பினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
வட இந்தியாவில் மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் மாநிலங்களில் இத்தகைய வன்முறை சம்பவங்களில் இந்துத்துவா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை விடவும் கூட சில இடங்களில் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது.