விமானப் படை ஜெட்
விமானப் படை ஜெட்

1அல்ல, 2அல்ல... 2,374 விமானங்கள்! 70 ஆண்டுகளில் இழப்பு - எப்படி?

கடந்த எழுபது ஆண்டுகளில் விமானப் படையின் 2 ஆயிரத்து 374 விமானங்கள் விபத்துக்குள்ளாகி நாசமாகியுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டின் விமானப் படையின் பலம் போதுமான அளவு இல்லை என்றும் இல்லையில்லை போதுமானதாக இருக்கிறது என்றும் இரு வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. இதில் போதுமான அளவுக்கு விமானப் படையின் வலு இல்லை என்பதைவிட, இருந்தது குறைந்துவிட்டது என புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது 42.5 படைப்பிரிவுகள் அளவுக்கு போர் விமானங்கள் தேவைப்படுகின்றன என்பது ஒரு கணக்கீடு. பாதுகாப்பு அமைச்சகம், விமானப் படை, அரசு வல்லுநர்களும் வெளியில் உள்ள வல்லுநர்களும் இதை ஒப்புக்கொள்கின்றனர். விமானப் படையின் வலுவில் தாக்குதல் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், மின்னனு போர்விமானம் போன்றவை அடங்கும்.

பேச்சளவில், 10 முதல் 12 வரையிலான படைப்பிரிவுகள் அளவுக்கு பற்றாக்குறை இருக்கிறது என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஒரு படைப்பிரிவானது 21 போர் விமானங்களைக் கொண்டிருக்க வேண்டும் எனும் நிலையில், மொத்தமாக 210- 252 போர் விமானங்கள் குறைவாக உள்ளன என்று கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கையில் சில தரப்பினருக்கு மாறுபாடு இருந்தாலும், விமானப் படையின் விபத்துகள் அதிகரித்துள்ளதையும் ஆதங்கத்துடன் குறிப்பிடுகின்றனர். விபத்துகளில் போர் விமானங்கள் நாசமாவது மட்டுமின்றி திறமையான போர் விமானிகளும் உயிரிழக்க நேர்கிறது.

பொதுவாக, இந்திய விமானப் படையின் விபத்து விவரங்களை பாதுகாப்பு அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கான பதிலில் விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

இதுசார்ந்த விவரங்களின் தொகுப்பைப் பார்த்தால், 1952 முதல் 2021ஆம் ஆண்டுவரை 70 ஆண்டுகால விபத்துகளின் முக்கிய தகவல்களை கவனிக்க முடியும்.

எழுபது ஆண்டு கால விபத்துகளில் மொத்தம் 2,374 போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. இவற்றில் 1126 தாக்குதல் விமானங்களும் 1248 தாக்குதல் அல்லாத விமானங்களும் அடங்கும்.

இவற்றைத் தவிர, 229 பயிற்சி விமானங்கள், 196 ஹெலிகாப்டர்களும் விழுந்து நாசமாகியுள்ளன.

இந்த விபத்துகளில் ஆயிரத்து 305 திறமையான விமானிகளும் உயிர் இழந்துள்ளனர் என்பது முக்கியம்.

சண்டை விமானங்களில் இதுவரை 50 படைப்பிரிவுகளின் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானை எதிர்த்து 1947-48, 1965, 1971, கார்கிலில் 1999ஆம் ஆண்டில் என நடைபெற்ற போர்களில் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

1965ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது இந்திய விமானப் படை வான் தாக்குதலில் ஈடுபடவில்லை. ஆனால் அப்போது நாடு நிலத்திலேயே 59 விமானங்களை இழந்தது. அவற்றில் பெரும்பாலும் பாகிஸ்தான் படையால் பதான்கோட், கலைகுந்தா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சிக்கியவை ஆகும்.

அந்த ஆண்டுதான் இந்திய விமானப் படைக்கு பெரும் இழப்பான ஆண்டாகக் கருதப்படுகிறது. இதுவரை இல்லாதபடி அளவுக்கு அளவுக்கதிகமான இழப்பு ஏற்பட்டது; குறிப்பாக, பாகிஸ்தானைவிட நம் தரப்புக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது என இந்தியத் தரப்பில் இன்றுவரை ஒரு வருத்தம் உண்டு.

ஆனாலும் அந்த அனுபவத்தைப் படிப்பினையாகக் கொண்டு, 1971 போரில் இந்திய விமானப் படை சிறப்பாகச் செயல்பட்டது.

போர் இல்லாத அமைதிக் காலத்திலும் விமானப் படை விமானங்கள் அடிக்கடி விழுந்து நொறுங்கியது தொடர்ந்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு இதைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

விபத்துகளுக்கு பொதுவாக, தனிநபர் தவறுகள், தொழில்நுட்பக் கோளாறுகள், பருவநிலை, பறவைத் தாக்குதல் போன்ற இயற்கையான காரணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொழில்நுட்பப் பிரச்னை என்பது பழைய ரசிய சோவியத் ஒன்றிய தகர்வுக்குப் பிறகு, அந்த அரசு தந்த மிக் ரக விமானங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்காமல் போனது முக்கியமான காரணமாக இருந்தது. மோசமான பராமரிப்பும் இன்னொரு முக்கிய காரணம்.

அந்த நிலையில் மிக் 21 வகை விமானங்கள் காலாவதி ஆக்கப்பட்டபோதும், அவற்றை இந்திய விமானப் படை பயன்படுத்தியது. உலக அளவில் இந்த வகை விமானங்களை பறக்கும் சவப்பெட்டிகள் என்றும் விதவைகளை உண்டாக்கும் விமானங்கள் என்றும் கடுமையாகக் கூறப்பட்டது.

1980-90களிலோ பயிற்சி விமானங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின. தொடர்ச்சியாக நிகழ்ந்த விபத்துகளில் பயிற்சி பெறுபவரும் பயிற்சி அளிப்பவரும் என எத்தனையோ விமானப் படை விமானிகளை பலிகொடுக்க வேண்டியதாயிற்று.

அப்போதுவரை, பயிற்சிக்காக ’எச்பிடி32 ஸ்டேஜ்-1’ என்ற வகை விமானத்தையே பயன்படுத்தி வந்தார்கள். 23 ஆண்டுகளில் 17 விபத்துகள் ஏற்பட்டு, 19 விமானிகள் இறந்துபோனார்கள். அதன்பிறகு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் எச்டிடி40 என்ற நவீன விமானத்தை உருவாக்கியது.

மொத்தம் 229 பயிற்சி விமானங்கள் விழுந்து நொறுங்கிய பிறகு, முதல் நிலைப் பயிற்சிக்கான விமானத்தை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகே 2013இல் இந்திய விமானப் படை மாற்றியது.

இதைப்போல நவீன ஜெட் விமான மூன்றாம் நிலைப் பயிற்சிக்கும் மிக்21 வகையறாவைத் தவிர வேறு மாதிரிகள் இல்லாத நிலைமையும் இருந்தது. கால் நூற்றாண்டு கழித்தே மிக்21க்குப் பதிலாக பிரிட்டனில் உருவாகப்பட்ட ஹாக் நவீன பயிற்சி ஜெட் விமானங்கள் சேர்க்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள், விமானப் படையில் விபத்துகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தது. இந்திய விமானப் படை தன் புது யுகத்தில் நுழைந்தது எனலாம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com