தில்லியில் இன்றைய சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, வரும் 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த தேசமாக மாற்ற ஏழு வழிகளில் முன்னேற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அவர் பேசியதாவது:
"பலவீனமான நாடுகள் பட்டியலில் இருந்த இந்தியா, கடந்த 12 ஆண்டுகளில், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடாக முன்னேறியுள்ளது.
தன்னிறைவு அடைந்த ஒரு நாடாக நாம் முன்னேற வேண்டும். இதற்கு, ஏழு வழிகளில் வலிமையடைய வேண்டும்.
1) உற்பத்தி ஆற்றல்: இந்தியாவை ஒரு நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலியாக மாற்ற வேண்டும்.
2) வேளாண்மை – உணவு பொருட்கள்: இந்திய உணவுப் பொருட்களின் செய்முறைகளில் முன்னேற்றங்களைப் புகுத்தி உலகளாவிய நுகர்வோருக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
3) தொழில்நுட்பம்- புதுமை: செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், விண்வெளி, ரோபோட்டிக்ஸ், தரவு மையங்கள், அடுத்த தலைமுறைக்கான தகவல்தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும்.
4) விரைவு ஆற்றல்: அதிவிரைவு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், விமானநிலையங்கள், துறைமுகங்கள், பல்முனை சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை விரிவுபடுத்த வேண்டும்.
5) பாதுகாப்பு சக்தி: தற்சார்புடைய பாதுகாப்பு அம்சங்களை முன்னேற்றி இந்தியாவை சிறந்த ஏற்றுமதியாளராக முன்னேற்ற வேண்டும்.
6) பசுமை – நீலப் பொருளாதார வளர்ச்சி: புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை ஹைட்ரஜன், சேமிப்பு, பசுமைப் போக்குவரத்து, மீன்வளம், கடல்சார் தொழில்நுட்பம் ஆகியவற்றை விரிவுபடுத்துதல்.
7) இந்தியாவின் மென்சக்தி : யோகா, ஆயுர்வேதம், சுகாதாரம், கலாச்சாரம், இந்தியாவின் பாரம்பரிம் ஆகியவற்றைக் கொண்டு நம் நாட்டின் செல்வாக்கை உலக அளவில் கொண்டுசெல்ல வேண்டும்.
அடுத்த ஓராண்டில் 1 கோடி இளைஞர்களுக்கு ஏ.ஐ. துறையில் பயிற்சி வழங்கப்படும்.
வரும் 2047ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தியை எட்ட வேண்டும். அடுத்த 6 அல்லது 7 ஆண்டுகளில் 5 புதிய அணு உலைகள் பயன்பாட்டிற்கு வரும்." என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.